தேவாரப் பாடல் பெற்ற 276 சிவாலயங்களில் கடைசி தலமாகவும், அகத்திய முனிவர் வழிபட்ட தலமாகவும், காளவ முனிவர் அருள் பெற்ற தலமாகவும், வறுமை, பிணி நீக்கும் புண்ணிய தலமாகவும் விளங்குகிறது, கிளியனூர் அகஸ்தீஸ்வரர் திருக்கோவில். இந்த ஆலயம், விழுப்புரம் மாவட்டம் சேமங்கலம் அருகே கிளியனூர் கிராமத்தில் அமைந்துள்ளது.
காளவ மகரிஷியின் இரண்டு பெண் குழந்தைகள் மிகக் கொடிய நோயால் அவதிப்பட்டு வந்தனர். இதனால் மிகவும் வருத்தம் அடைந்த மகரிஷி, இங்கு பல ஆண்டுகள் தங்கி வழிபாடு செய்து வந்தார். இதையடுத்து, சிவபெருமான் அருளால் அவரது குழந்தைகளின் நோய் நீங்கப் பெற்றது. மேலும் சுகப்பிரம்ம மகரிஷி, இத்தல இறைவனை வழிபட்டு தனது தீராத வயிற்று வலி நீங்கப் பெற்றதாகவும் கூறப்படுகிறது.
திருஞானசம்பந்தர் காலத்தில் இக்கோவில், செங்கற் கோவிலாக இருந்திருக்கக்கூடும் என கருதப்படுகிறது. பின்பு, இடைக்கால சோழர் காலத்தில் கற்கோவிலாக கட்டப்பட்டிருக்கிறது. 'கிள்ளி' என்பது சோழர்களின் பொதுவான பெயராகும். எனவே, இவ்விடம் 'கிள்ளியநல்லூர்' என்று அழைக்கப்பட்டு, அதுவே மருவி 'கிள்ளியனூர்', ‘கிளியனூர்’ என்றாகி இருக்கலாம் என கூறப்படுகிறது.
இத்தல இறைவன், அகத்திய முனிவரால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாக நம்பப்படுகிறது. ஆதிசேஷன், இங்கு வந்து இறைவனை பூஜித்துள்ளார். எனவே, ராகு கேது தோஷம் உள்ளவர்கள் இங்குள்ள இறைவனை வழிபட்டால் தோஷம் நீங்கப் பெறும் என்பது நம்பிக்கை.
மேற்கு திசை நோக்கி அமைந்துள்ள இக்கோவில், சோழர்களால் கட்டப்பட்டதாகும். கிழக்கு மற்றும் மேற்கு பக்கங்களில் நுழைவுவாசல்கள் உள்ளன. மேற்கு நுழைவுவாசலின் மத்தியில் சிவபெருமான், பார்வதி தேவி சுதைச் சிற்பங்கள் காணப்படுகின்றன. அவர்களின் அருகில் அகத்தியரும், திருஞான சம்பந்தரும் வழிபடும் கோலத்தில் உள்ளனர். வலது பக்கமும், இடதுபக்கமும் விநாயகர் மற்றும் வள்ளி-தெய்வானை சமேத முருகப்பெருமான் காட்சி தருகிறார்கள்.
கிழக்கு வாசல் வழியாக நுழைந்ததும், விநாயகர் சன்னிதி காணப்படுகிறது. அதன் இடதுபுறம் அன்னை அகிலாண்டேஸ்வரி தனிச் சன்னிதியில் கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். கருவறையில் மூலவர் அகஸ்தீஸ்வரர் சுயம்பு மூர்த்தியாக மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். இறைவனின் எதிரில் நந்தி தேவர் காட்சி தருகிறார். நந்தியின் வலது பின்புறத்தில் அகத்தியர், சுவாமியை நோக்கி காணப்படுகிறார். நந்தியின் இடது பின்புறத்தில் ஜேஷ்டாதேவி, நாகர்கள் உள்ளனர். அடுத்ததாக கஜலட்சுமி, முருகன், நவக்கிரகங்கள் ஆகியோரது சன்னிதிகள் அமைந்துள்ளன.
கோவில் சுவர்களில் சோழர் காலத்தைச் சேர்ந்த பல கல்வெட்டுகள் காணப்படுகின்றன. பல்லவ, விஜயநகர மன்னர்களும் இக்கோவிலுக்கு திருப்பணி செய்துள்ளனர். கோவில் தல விருட்சமாக வன்னி மரமும், தல தீர்த்தமாக அக்னி தீர்த்தமும் உள்ளன.
கல்வியில் சிறந்து விளங்கவும், திருமணத் தடை அகலவும், குழந்தை பாக்கியம் கிடைக்கவும் இங்கு வந்து வழிபட்டு செல்கிறார்கள். வயிற்று வலியால் பாதிக்கப்பட்டவர்கள், இத்தல இறைவனுக்கு பால் அபிஷேகம் செய்து, அதை சாப்பிட்டால் விரைவில் வயிற்று வலி குணமாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. மேலும், வறுமை, பெண்களால் ஏற்படும் துன்பங்கள், தீராத நோய்கள் போன்றவைகளை தீர்க்கும் தலமாகவும் இக்கோவில் விளங்குகிறது.
இக்கோவிலில் சிவராத்திரி, ஐப்பசி அன்னாபிஷேகம், மார்கழி திருவாதிரை, பங்குனி உத்திரம் போன்ற விழாக்களும், பவுர்ணமி, அமாவாசை, கிருத்திகை, பிரதோஷம் போன்ற நாட்களில் சிறப்பு வழிபாடுகளும் நடைபெறுகின்றன.
“கோவில் சுவர்களில் சோழர் காலத்தைச் சேர்ந்த பல கல்வெட்டுகள் காணப்படுகின்றன“
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் இருந்து புதுச்சேரி செல்லும் வழியில் சுமார் 18 கிலோமீட்டர் தொலைவில் கிளியனூர் அகத்தீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.