ஆன்மிகம்

ஆனித்திருவிழா... நெல்லையப்பர் கோவில் தேர்களை சுத்தம் செய்யும் பணி

தேர்களை சுற்றி அடைக்கப்பட்டிருந்த கண்ணாடி இழை கவசம் அகற்றப்பட்டு தண்ணீர் பீய்ச்சியடித்து சுத்தம் செய்யப்பட்டது.

நெல்லை,

தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவன் கோவில்களில் ஒன்றான நெல்லையப்பர் -காந்திமதி அம்பாள் கோவில் ஆனிப் பெருந்திருவிழா விமரிசையாக நடைபெறும். அவ்வகையில் இந்த ஆண்டுக்கான திருவிழா வருகிற 20-ந் தேதி (சனிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தினமும் காலை, மாலையில் சுவாமி, அம்பாள் வீதி உலா, இரவில் பக்தி இசை நிகழ்ச்சிகள் நடைபெறும். 28-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) தேரோட்டம் நடக்கிறது.

திருவிழாவுக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.

சுத்தம் செய்யும் பணி

தேரோட்டத்திற்கான தேர்களை தயார் செய்யும் பணியும் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது. விநாயகர், சுப்பிரமணியர், நெல்லையப்பர், காந்திமதி அம்பாள் மற்றும் சண்டிகேசுவரர் ஆகிய 5 தேர்களை சுற்றி அடைக்கப்பட்டிருந்த கண்ணாடி இழை கவசம் அகற்றப்பட்டது.

இந்த நிலையில் நேற்று தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்யும் பணி நடந்தது. பாளையங்கோட்டை தீயணைப்பு போக்குவரத்து பிரிவு அலுவலர் சுரேஷ் குமார் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் வந்து 5 தேர்களுக்கும் தண்ணீரை பீய்ச்சி அடித்து சுத்தம் செய்தனர்.

மேயர் ராமகிருஷ்ணன்

இதேபோல் சுவாமி, அம்பாள் மண்டபங்கள், அனுப்பு மண்டபம், மரசிற்பங்கள், கதவுகளிலும் தீயணைப்பு வீரர்கள் தண்ணீர் பீச்சியடித்து சுத்தம் செய்தனர். இந்த பணிகளை மேயர் ராமகிருஷ்ணன் பார்வையிட்டார்.

இதை தொடர்ந்து தேருக்கு சாரம் கட்டுதல், குதிரைகள், அலங்கார துணி அமைத்தல் போன்ற பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகின்றன.