ஆன்மிகம்

மனித உருவில் சிவபெருமான்... திருவெண்காடு கோவிலில் அகோரமூர்த்திக்கு சிறப்பு பூஜை

புரட்டாசி மாதம் பூரம் நட்சத்திரமான இன்று அகோரமூர்த்திக்கு பல்வேறு மங்கல பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.

மயிலாடுதுறை,

மனித உருவில் சிவபெருமான் இருக்கும் திருவெண்காடு கோவிலில் அகோர மூர்த்திக்கு பூரம் நட்சத்திரத்தில் சிறப்பு பூஜை நடந்தது.

அகோரமூர்த்தி

மயிலாடுதுறை மாவட்டம், திருவெண்காட்டில் பிரசித்தி பெற்ற பிரம்ம வித்யாம்பிகை சமேத சுவேதாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு சிவனின் 5 முகங்களில் ஒன்றான அகோர முகத்தில் இருந்து தோன்றிய அகோரமூர்த்தி மனித உருவில் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார்.

முன்பொரு காலத்தில் மருத்துவாகரன் என்பவர் சிவனிடம் தவம் இருந்து சூலாயுதத்தை பெற்றார். இதையடுத்து தேவர்கள் மற்றும் பொதுமக்களை அந்த சூலாயுதத்தை கொண்டு இம்சை செய்தான். இதனை பொறுக்காமல் சிவன் தனது 5 முகங்களில் ஒன்றான அகோர முகத்தில் இருந்து வெடித்து நெருப்பு பிழம்பாக அகோரமூர்த்தி உருவத்தில் காட்சி அளித்தார். இதை பார்த்த அசுரன் சரணாகதி அடைந்தான்.

அஷ்ட பைரவர்கள்

சிவன் மனித உருவில் இங்கு இருப்பது விசேஷமான ஒன்றாகும். இவரது திருமேனியில் அஷ்ட (எட்டு) பைரவர்கள் உள்ளனர். இவரை வழிபட்டால் எதிரிகள் தொல்லை நீங்குதல் உள்ளிட்ட பல்வேறு நன்மைகள் கிடைக்கும். இவர் மாசி மாதம் பூர நட்சத்திரத்தில் அவதரித்தார். இதன் காரணமாக மாதந்தோறும் பூரம் நட்சத்திர வழிபாடு நடக்கிறது.

புரட்டாசி மாதம் பூரம் நட்சத்திரமான இன்று அகோரமூர்த்திக்கு பல்வேறு மங்கல பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. இதையடுத்து அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் கோவில் நிர்வாக அதிகாரி முருகன், குணசேகரன், திருவெண்காடு பிராமணர் சங்க தலைவர் வாசுதேவன் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT