தென்காசி,
தென்காசி காசி விஸ்வநாதர் கோவிலில் நடைபெற்று வரும் ஐப்பசி திருக்கல்யாண திருவிழாவில் இன்று தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது.
காசிக்கு நிகரான தலமாக கருதப்படும் தென்காசி காசி விஸ்வநாதர் கோவில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இந்த ஆலயத்தில் சித்திரை விசு, ஐப்பசி விசு, சுவாமி அம்பாள் திருக்கல்யாணம் என பல்வேறு விழாக்கள் வெகு விமரிசையாக நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் காசி விசுவநாதப் பெருமானின் திருவருள் ஆணைப்படி உலகநாத பாண்டிய மன்னருக்கு லோகநாயகி என்னும் மகளாகப் பிறந்து, குழல்வாய்மொழிமை என்று திருநாமம் பெற்ற லோகநாயகி குழல்வாய் மொழியம்மையை இறைவன் மணம் முடித்து சென்ற காட்சியை உலக மக்கள் காணும் பொருட்டு இத்தலத்தில் எழுந்தருளிய உலகம்மனுக்கு ஆண்டுதோறும் ஐப்பசி மாதத்தில் திருக்கல்யாண திருவிழா நடைபெறுவது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டிற்கான திருக்கல்யாண திருவிழா கடந்த மாதம் 26 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருக்கல்யாண திருவிழாவை முன்னிட்டு நாள்தோறும் சுவாமி அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதி உலா செல்லும் நிகழ்வும் நடைபெற்றது.
11 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் 9-ஆம் நாள் நிகழ்ச்சியாக இன்று காலையில் அம்பாள் திருத்தேருக்கு எழுந்தருளினார். சிறப்பு தீபாராதனையைத் தொடர்ந்து தேர் வடம் பிடிக்கப்பட்டது. தென்காசி மட்டுமின்றி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்துகொண்டு பக்தி முழக்கம் எழுப்பியபடி திருத்தேரினை வடம் பிடித்து இழுத்தனர். மங்கள இசை வாத்தியங்கள் முழங்க, 4 வீதிகளிலும் தேர் அசைந்து வந்து நிலையை அடைந்தது.
10-ஆம் திருநாள் நிகழ்ச்சியாக நாளை தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறுகிறது. 11-ஆம் திருநாளான 5-ஆம் தேதி காலை தீர்த்தவாரி மண்டபத்திற்கு அம்பாள் தபசு காட்சிக்காக எழுந்தருளும் நிகழ்ச்சியும், மாலை உலகம்மனுக்கு காசி விசுவநாதர் தபசு காட்சி கொடுக்கும் நிகழ்வும் நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து இரவு 9 மணிக்கு மேல் திருக்கல்யாண வைபவம் நடைபெற உள்ளது.