தங்கச் சப்பரத்தில் எழுந்தருளிய காந்திமதி அம்பாளுக்கு காட்சி கொடுத்த நெல்லையப்பர் 
ஆன்மிகம்

ஐப்பசி திருக்கல்யாண திருவிழா: காந்திமதி அம்பாளுக்கு காட்சி கொடுத்த நெல்லையப்பர்

நெல்லையில் நடைபெற்று வரும் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா, 9-ந்தேதி பட்டினப்பிரவேசத்துடன் நிறைவடைகிறது.

நெல்லை,

நெல்லை டவுன் சுவாமி நெல்லையப்பர் கோவிலில் நடைபெற்று வரும் ஐப்பசி திருக்கல்யாண திருவிழாவில் காந்திமதி அம்பாளுக்கு, சுவாமி நெல்லையப்பர் காட்சி கொடுக்கும் வைபவம் நடைபெற்றது.

ஐப்பசி திருக்கல்யாண திருவிழா

தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் -காந்திமதி அம்பாள் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கடந்த மாதம் 26-ந்தேதி அம்மன் சன்னதியில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

10-ம் திருநாளான நேற்று முன்தினம் இரவு காந்திமதி அம்பாள் தபசு கோலத்தில் தங்க சப்பரத்தில் காட்சி மண்டபம் எழுந்தருளினார்.

நேற்று நெல்லையப்பருக்கு பல்வேறு அபிஷேக பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. மணமகன் அலங்காரத்தில் கையில் வெற்றிலை, பாக்குடன் ரிஷப வாகனத்தில் சுவாமி நெல்லையப்பர் கம்பா நதிக்கு எழுந்தருளினார். அங்கு காட்சி மண்டபத்தில் மேளதாளங்கள் முழங்க, கம்பா நதி காமாட்சி அம்மன் கோவிலில் இருந்து தவக்கோலத்தில் தங்கச்சப்பரத்தில் எழுந்தருளிய காந்திமதி அம்பாளுக்கு சுவாமி நெல்லையப்பர் காட்சி கொடுத்தார்

சுவாமி-அம்பாள் ஒருசேர காட்சி

தொடர்ந்து மாலை மாற்றும் உற்சவம் நடைபெற்றது. காந்திமதி அம்பாள், நெல்லையப்பரை 3 முறை வலம் வந்து மாலை மாற்றிக்கொண்டார்.

தொடர்ந்து இருவரும் கம்பா நதி காமாட்சி அம்மன் கோவிலில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர். பின்னர் திருஞானசம்பந்தருக்கும் சுவாமி நெல்லையப்பர், காந்திமதி அம்பாள் இருவரும் ஒருசேர காட்சி கொடுத்துவிட்டு நெல்லையப்பர் கோவிலுக்கு சென்றனர்.

இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை 4.30 மணியளவில் ஆயிரம்கால் மண்டபத்தில் திருக்கல்யாணம் நடைபெற்றது. இதைதொடர்ந்து 3 நாட்கள் ஊஞ்சல் மண்டபத்தில் சுவாமி, அம்பாள் ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது. 9-ந்தேதி பட்டினப்பிரவேசத்துடன் விழா நிறைவடைகிறது.

பேட்டை பால்வண்ணநாத சுவாமி கோவில்

பேட்டையில் உள்ள பால்வண்ணநாத சுவாமி கோவிலில் கடந்த 60 ஆண்டுகளுக்கு முன்பாக திருக்கல்யாணம் நடந்தது. தற்போது இந்து சமய அறநிலைத்துறை மற்றும் உழவார பணியினர் சிவனடியார்கள், பொதுமக்கள் முயற்சியுடன் நேற்று திருக்கல்யாண திருவிழா நடந்தது.

கோயிலுக்கு சொந்தமான காட்சி மண்டபத்தில் காலை 5 மணி முதல் அம்பாள் காட்சி மண்டபம் எழுந்தருளல், திருவாசகம் முற்றோதுதல். சுவாமி ரிஷப வாகனத்தில் காட்சி கொடுத்தல் போன்றவை நடந்தன. இரவு 7 மணிக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது.

SCROLL FOR NEXT