மகாபாரதத்தில் தர்மர் மீது அர்ச்சுனன் கொண்டிருந்த மரியாதையும், பாசமும் பல சந்தர்ப்பங்களில் வெளிப்பட்டது. குறிப்பாக அண்ணன் வகுத்த நெறியைக் காப்பதற்காக அர்ச்சுனன் செய்த செயல் போற்றத்தக்கதாகும்.
சுயம்வரத்தில் திரவுபதியை வென்ற அர்ச்சுனன், அவளை வீட்டிற்குஅழைத்து வந்தபோது, தாயார் குந்தி தேவியின் ஒற்றை வார்த்தையால் வாழ்க்கையே மாறிப்போனது. வீட்டின் முன்கதவுக்கு வெளிப்பக்கம் நின்று கொண்டு, தனக்கு ஒரு தெய்வீக பரிசு கிடைத்திருப்பதாக அர்ச்சுனன் கூற, மகன் என்ன கொண்டு வந்திருக்கிறான் என்று கதவை திறந்து பார்க்காமலேயே பதில் அளித்த குந்தி தேவி, அதை பாண்டவர்கள் ஐவரும் சமமாக பிரித்துக் கொள்ளும்படி கூறிவிடுகிறார். ஐந்து சகோதரர்களும் ஒருபோதும் தாயாரின் பேச்சை மீறியதில்லை. எனவே ஐந்து சகோதரர்களும் திரௌபதியை தனித்தனியாக மணமுடித்துக் கொண்டனர்.
அத்துடன், சகோதராகள் ஐந்து பேரில் ஆண்டுக்கு ஒருவருடன் திரவுபதி வாழ வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. இவ்வாறு வாழும் காலத்தில் மற்ற 4 பேரும் திரவுபதி இருக்கும் அறைக்குள் செல்லக்கூடாது. அப்படி யாராவது அந்த அறைக்குள் சென்றால், அவர் 12 ஆண்டுகள் நாட்டை விட்டு விலகி, வனவாச வாழ்க்கையை மேற்கொள்ள வேண்டும் என்று விதிமுறை வகுக்கப்பட்டது. பாண்டவர்களின் ஒற்றுமை குலையாமல் இருக்க இந்த ஏற்பாடு செய்யப்பட்டது.
இவ்வாறு தர்மர்-திரவுபதி சேர்ந்து வாழ்ந்த காலகட்டத்தில் அர்ச்சுனனுக்கு ஒரு சோதனை வந்தது. வேதம் கற்றறிந்த சில அந்தணர்களுக்குச் சொந்தமான பசுக்களை திருடர்கள் திருடிச் சென்றனர். தங்கள் பசுக்களை மீட்டுத் தருமாறு அந்தணர்கள் அர்ச்சுனனிடம் முறையிட்டனர். அவர்களுக்கு உதவ நினைத்த அர்ச்சுனன், தனது வில், அம்பை எடுக்க விரைந்தார். ஆனால், அவரது ஆயுதங்கள் தர்மரும், திரவுபதியும் இருந்த அறைக்குள் இருந்தன.
அந்தணர்களின் பசுக்களை திருடர்களிடம் இருந்து மீட்டுக் கொடுப்பது தனது கடமை என்பதை அர்ச்சுனன் உணர்ந்தார். எனவே வேறு வழியின்றி, தருமராஜனும் திரவுபதியும் இருந்த அறைக்குள் சென்று, தனது ஆயுதங்களை எடுத்தார். பின்னர் திருடர்களோடு போரிட்டு, பசுக்களை மீட்ட அர்ச்சுனன், அவற்றை மீண்டும் அந்தணர்களிடம் ஒப்படைத்தார்.
அர்ச்சுனன், தனது கடமையைச் சரியாக நிறைவேற்றியிருந்தாலும், ஆயுதங்களை எடுப்பதற்காக தருமராஜனும் திரவுபதியும் இருந்த அறைக்குள் சென்றதை எண்ணி வருந்தினார். தங்களிடையே இருந்த விதியை மீறியதால் அர்ச்சுனன் 12 ஆண்டுகள் வனவாசம் செல்ல முடிவு செய்தார்.
அர்ச்சுனன் நாட்டை விட்டு செல்ல முடிவு செய்ததை அறிந்த தருமராஜன், அவரைத் தடுக்க முயன்றார். “அர்ச்சுனன் எனது அறைக்குள் வந்ததில் எந்த தவறும் இல்லை. அந்தணர்களின் பசுக்களைக் காப்பதற்காக ஆயுதங்களை எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அதனாலேயே அறைக்குள் நுழைந்தான். மேலும், என்னுடைய அனுமதியுடன்தான் அவன் ஆயுதங்களை எடுத்துச் சென்றான். எனவே, அவன் விதியை மீறியதாகக் கருத வேண்டியதில்லை; வனவாசம் செல்ல வேண்டிய அவசியமும் இல்லை” என்று தருமராஜன் கூறினார்.
ஆனால், அர்ச்சுனன் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. விதி அனைவருக்கும் ஒன்றுதான். எனக்காக அந்த விதியை மாற்றவோ, தண்டனையிலிருந்து என்னை விலக்கவோ கூடாது என்றார். “நான் செய்த செயலுக்கு நானே பொறுப்பேற்க வேண்டும்” என்று கூறி, தனது முடிவில் உறுதியாக இருந்தார்.
அண்ணன் தருமராஜன், தன்னைத் தடுக்க முயன்ற போதிலும், தாங்கள் அனைவரும் ஏற்றுக்கொண்ட விதியை எக்காரணம் கொண்டும் மீறக்கூடாது என்ற எண்ணத்தால் அர்ச்சுனன் தனது முடிவை மாற்றிக்கொள்ளவில்லை. தான் செய்தது நல்ல நோக்கத்திற்காக இருந்தாலும், விதியை மீறியதற்கான பொறுப்பை ஏற்றுக்கொள்வதே சரியானது என்று கருதினார்.
அதனால், தண்டனையாக வனவாசத்தை ஏற்றுக்கொண்டு, நாட்டை விட்டு வெளியேறினார். வனவாசத்தின்போது பல்வேறு புனிதத் தலங்களுக்குச் சென்று, அங்குள்ள புனித நதிகள் மற்றும் தீர்த்தங்களில் நீராடி, இறைவனை வழிபட்டு தீர்த்த யாத்திரை மேற்கொண்டார்.
அர்ச்சுனனின் இந்த தியாகம், தர்மத்துடன் நடப்பது, கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவதன் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது. தனக்குச் சாதகமாக விதிகளை மாற்றிக்கொள்ளாமல், அண்ணன் வகுத்த நெறிக்கும் குடும்பத்தின் ஒற்றுமைக்கும் மதிப்பளித்த அர்ச்சுனனின் பண்பு போற்றத்தக்கது.
தன்னிடம் உதவி கேட்டு வந்தவருக்கு உதவுவதே முதன்மையான கடமை, தர்மம் என்பதை உணர்ந்த அர்ச்சுனன், அதனால் ஏற்படும் விளைவுகளை அறிந்திருந்தும் தர்மத்தை காப்பதற்காக உதவி செய்தார். மேலும், தருமர் தடுத்தும், சட்டத்திற்கு முன்பாக அனைவரும் சமம் என்பதற்காக விதியை மதித்து 12 ஆண்டுகள் வனவாசம் மேற்கொண்டார்.
இதுபோல, நமக்கான கடமையை செய்வதுடன், நமக்கு வகுக்கப்பட்டுள்ள சட்டங்களுக்கு மதிப்பளிக்க வேண்டும். அறியாமல் தவறு செய்திருந்தாலும் அதை மறைக்காமல் ஏற்றுக்கொண்டு, அதற்கான பரிகாரங்களை நிறைவேற்ற வேண்டும்.