தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டம் சிந்தலக்கரை வெட்காளியம்மன் காளிபராசக்தி பீடத்தில் ஆனி மாத வேள்வி பூஜை, சக்தி மாலை இருமுடி விழா மற்றும் மகாயாகம் நடைபெற்றது.
இந்த விழாவின் முக்கிய நிகழ்வான மகாயாக சாலையில், மனிதர்களின் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தப்படும் பழ வகைகள், உணவு தானியங்கள், உடைகள், குழந்தை தொட்டில், கல் உரல், அம்மி, மாங்கல்யம் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் யாக குண்டத்தில் செலுத்தப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன.
இதனைத் தொடர்ந்து இந்த தலத்தின் முக்கிய ஈர்ப்பான 42 அடி உயரம் கொண்ட வெட்காளியம்மன் விக்கிரகத்திற்கு 108 லிட்டர் பாலாபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் 18 கிலோ எடை கொண்ட எலுமிச்சம்பழ மாலை அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகளும் மகா தீபாராதனைகளும் நடைபெற்றன.
ஆனி மாத இருமுடி விழாவை முன்னிட்டு ஆண்டுதோறும் இங்கு பக்தர்களின் வருகை அதிகரித்து வருகிறது. அந்த வகையில், இன்று நடைபெற்ற மூன்றாம் கட்ட விழாவில் கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி, திருவண்ணாமலை மற்றும் கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து விரதம் இருந்து, காப்பு கட்டி, இருமுடி ஏந்தி வந்த 1,000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பம்பை வாத்தியங்கள் முழங்க கோவிலுக்கு வந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி வழிபட்டனர். விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.