சிதம்பரம்,
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உலக புகழ்பெற்ற நடராஜர் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் ஆருத்ரா தரிசன விழாவும், ஆனி மாதத்தில் ஆனித்திருமஞ்சன விழாவும் வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான ஆனித்திருமஞ்சன விழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.
இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் பஞ்சமூர்த்திகள், பக்தர்களுக்கு அருள்பாலித்தனா. காலை 7 மணிக்கு யாக சாலையில் வைத்து பூஜை செய்யப்பட்ட பசுக்கொடி, வேத மந்திரங்கள் முழங்க ஊர்வலமாக நடராஜர் சன்னதிக்கு கொண்டு செல்லப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
பின்னர் நடராஜர் சன்னதி எதிரே உள்ள கொடிமரத்துக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. அப்போது கொடிமரம் அருகே பஞ்சமூர்த்திகளான சோமாஸ்கந்தர், சிவானந்தநாயகி, விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் ஆகியோர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர். சிவகாமசுந்தரி சமேத நடராஜமூர்த்தி வீற்றுள்ள சித்சபை எதிரே உள்ள கொடிமரத்தில், பஞ்சமூர்த்திகள் முன்னிலையில், சுவாமியின் பிரதிநிதியான ஹஸ்தராஜரை முன்னிறுத்தி ஆவாஹணம் செய்து இன்று (சனிக்கிழமை) காலை 8 மணிக்கு உற்சவ ஆச்சாரியார் சி.ந.ராஜூ தீட்சிதர் ரிஷபக் கொடியை ஏற்றி வைத்தார். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசித்தனர்.டிஎஸ்பி டி.பிரதீப் மேற்பார்வையில் நகர காவல் ஆய்வாளர் வி.சிவானந்தம் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தார்.
ஜூன் 14-ம் தேதி வெள்ளி சந்திர பிறை வாகன வீதிஉலா, 15-ம் தேதி தங்க சூரிய பிறை வாகன வீதிஉலா, 16-ம் தேதி வெள்ளி பூதவாகன வீதிஉலா, 17-ம் தேதி வெள்ளி ரிஷப வாகன வீதிஉலா (தெருவடைச்சான்), 18-ம் தேதி வெள்ளி யானை வாகன வீதிஉலா, 19-ம் தேதி தங்க கைலாச வாகன வீதிஉலா, 20-ம் தேதி தங்க ரதத்தில் பிச்சாண்டவர் வீதிஉலாவும், ஜூன் 21-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை தேர்த்திருவிழா நடைபெற உள்ளது.
பின்னர் இரவு 8 மணிக்கு ஆயிரங்கால் முன் முகப்பு மண்டபத்தில் ஏககால லட்சார்ச்சனை நடைபெறுகிறது. ஜூன். 22-ம் தேதி திங்கள்கிழமை அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பு காலை 4 மணி முதல் 6 மணி வரை சிவகாமசுந்தரி சமேத நடராஜமூர்த்திக்கு மகாபிஷேகம் நடைபெறும். காலை 10 மணிக்கு சித்சபையில் ரகசியபூஜையும், பஞ்சமூர்த்தி வீதி உலா வந்த பின்னர், பிற்பகல் 3 மணிக்கு மேல் ஆனித்திருமஞ்சன தரிசனமும், ஞானகாச சித்சபா பிரவேசமும் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோயில் பொதுதீட்சிதர்களின் கமிட்டி செயலாளர் ஜெ.ஜெயசூர்யா தீட்சிதர், துணைச் செயலாளர் ஏ.கணபதி சுப்பிரமணிய தீட்சிதர் மற்றும் பொதுதீட்சிதர்கள் ஆகியோர் செய்துள்ளனர்.