திருவண்ணாமலை,
திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்பட்டுள்ள மலையை சுற்றி அருணாசலேஸ்வரர் இன்று பக்தர்களோடு கிரிவலம் வந்தார்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 15-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி விமரிசையாக நடைபெற்றது. தீபத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக, நேற்று முன்தினம் மாலை கோவிலின் பின்புறம் உள்ள 2,668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது. மகா தீபத்தை காண வெளிநாடு, வெளி மாநிலங்கள், வெளி மாவட்டங்களில் இருந்து பல லட்சம் பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை தந்திருந்தனர். பெரும்பலான பக்தர்கள் கிரிவலம் சென்று அண்ணாமலையாரை வணங்கினர்.
அண்ணாமலையார் மலையில் ஏற்றப்பட்டுள்ள மகாதீபம் தொடர்ந்து 11 நாட்கள் பக்தர்களுக்கு காட்சி அளிக்கும். அதாவது, வருகிற 4-ந் தேதி வரையில் மலை உச்சியில் மகா தீபம் காட்சி அளிக்கும்.
மகா தீபத்தை தொடர்ந்து நேற்று தெப்ப உற்சவம் தொடங்கியது. முதல் நாளான நேற்று சந்திரசேகரர் தெப்ப உற்சவம் நடைபெற்றது. இன்று பராசக்தி அம்மன் தெப்ப உற்சவமும், நாளை சுப்பிரமணியர் தெப்ப உற்சவமும் நடைபெற உள்ளது.
கார்த்திகை தீபத்திருவிழா முடிந்த பின்னர் பக்தர்களை போன்று உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரரும் மகா தீபம் ஏற்றப்பட்டு உள்ள மலையை சுற்றி, பக்தர்களோடு கிரிவலம் செல்வது வழக்கம். அதன்படி இன்று உண்ணாமலை அம்மன் சமேதரராய் அருணாசலேஸ்வரர் கிரிவலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
அண்ணாமலையார் கிரிவலப்பாதையில் புறப்பட்டதும் பக்தர்கள் மிகுந்த உற்சாகமடைந்தனர். அண்ணாமலையாரை பின்தொடர்ந்து கிரிவலம் வந்தனர். ‘அண்ணாமலையாருக்கு அரோகரா’ என முழக்கம் எழுப்பியபடி கிரிவலப்பாதையின் வழிநெடுகிலும் ஏராளமானோர் சுவாமி செய்தனர்.