ஆனி மாத வளர்பிறை பிரதமை திதி முதல், நவமி திதி வரை உள்ள ஒன்பது நாட்கள், 'வாராஹி நவராத்திரி' என்று அழைக்கப்படுகிறது. இது ஆஷாட நவராத்திரி என்றும் அழைக்கப்படுகிறது. பொதுவாக, புரட்டாசியில் வரும் சாரதா நவராத்திரி, தை மாத வசந்த நவராத்திரி, பங்குனி மாத சியாமளா நவராத்திரி ஆகியவற்றை விட, ஆனி மாதத்தில் வரும் இந்த நவராத்திரி வாராஹி தேவியின் வழிபாட்டிற்கு உகந்த மிகவும் சக்தி வாய்ந்த நவராத்திரியாகக் கருதப்படுகிறது. அவ்வகையில் இந்த ஆண்டு வாராஹி நவராத்திரி விழாவானது நாளை (ஜூலை 15) தொடங்கி 23ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இந்த நாளில் வாராஷி அன்னை எழுந்தருளியிருக்கும் ஆலயங்களில் சிறப்பாக விழா நடைபெறும். தஞ்சை பெரிய கோவிலில் ஆஷாட நவராத்திரி மிக விசேஷமாக கொண்டாடப்படும். இந்த ஆண்டுக்கான விழா நேற்று தொடங்கியது. விழா நாட்களில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனை நடைபெறும். நவதானிய அலங்காரம், தேங்காய் பூ, சந்தனம், குங்கும அலங்காரம் என ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரங்கள் செய்யப்படுகின்றன.
அன்னை வாராஹி இரவு நேரத்திற்கு அதிபதி (ராத்திரி தேவி) என்பதால், இந்த ஒன்பது நாட்களும் மாலை மற்றும் இரவு நேரங்களில் செய்யப்படும் வழிபாடுகள் மிக உன்னதமான பலன்களைத் தரும் என்பது ஐதீகம்.
அன்னையானவள், சப்த மாதர்களாகப் போற்றப்படுகிறார். அந்த மாதாக்களில் ஸ்ரீ வாராஹியும் ஒருவர். வராஹ முகம் கொண்டு, மஹிஷ வாகனத்தில், கத்தி, கேடயம், கலப்பை, உலக்கை போன்ற ஆயுதங்களைத் திருக்கரங்களில் தாங்கி, படைத்தலைவியாக காவல் செய்பவர், ஸ்ரீ வாராஹி.
சென்னை தாம்பரத்தை அடுத்த சேலையூர்-வேங்கைவாசலில் அமைந்துள்ளது, 'ஸ்ரீ ஸ்கந்தாஸ்ரமம்'. இது, ஆன்மிக சிறப்பும், அமைதியும் நிறைந்த சக்தி வழிபாட்டிற்குரிய முக்கிய தலமாகவும் விளங்குகிறது. இங்கு ஸ்ரீ வாராஹி நவராத்திரி வைபவம் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
இந்த தலம், பிரமாண்டமான திருவுருவச் சிலைகளுக்கும், முறையான வேத, தாந்த்ரீக வழிபாட்டு முறைகளுக்கும் உலகப் புகழ்பெற்றது. இங்கு வீற்றிருக்கும் அன்னை ஸ்ரீ அஷ்டதசபுஜ துர்க்காதேவியை, ஸ்ரீவாராஹி அம்மனாக ஆவாஹனம் செய்து, ஒன்பது நாட்கள் மிக விசேஷமாக ஸ்ரீ வாராஹி நவராத்திரி பெருவிழா கொண்டாடப்படுகிறது.
இவ்விழாவில் ஸ்ரீ துர்க்கைக்கு, குங்கும காப்பு அலங்காரம் செய்து, ஸ்ரீ வன துர்க்கா மூலமந்திர ஹோமம் செய்யப்படுகிறது. அடுத்தடுத்த நாட்களில், மஞ்சள் காப்பு சாற்றி ஸ்ரீ சூலினி துர்க்கா மூல மந்திரம் ஹோமம், காய்கறி அலங்காரத்தில் ஸ்ரீ ஜாதவேதோ துர்க்கை மூலமந்திர ஹோமம், சந்தனக் காப்பு சாற்றி ஸ்ரீ சாந்தி துர்க்கை மூலமந்திர ஹோமம், மாதுளை முத்துக்கள் அலங்காரத்தில் ஸ்ரீ சபரி துர்க்கை மூலமந்திர ஹோமம், மகிஷாசுரமர்த்தினி அலங்காரத்தில் ஸ்ரீ ஜூவாலா துர்க்கை மூலமந்திர ஹோமம், பூ பாவாடை அலங்காரத்தில் ஸ்ரீ லவண துர்க்கை மூலமந்திர ஹோமம், தேங்காய் பூ அலங்காரத்தில் ஸ்ரீ தீப துர்க்கை மூலமந்திர ஹோமம், ஊஞ்சல் அலங்காரத்தில் ஸ்ரீ ஆஸூரி துர்க்கை மூலமந்திர ஹோமம், ஸ்ரீ கமலாம்பாள் அலங்காரத்தில் ஸ்ரீ மஹா வாராஹி மூலமந்திர ஹோமம், கடைசி நாளான ஒன்பதாம் நாளன்று, தங்கக் கவசம் சாற்றி ஸ்ரீ திருஷ்டி துர்க்கை மூலமந்திர ஹோமம் போன்றவை வேத விற்பன்னர்களால் நடத்தப்படுகின்றன.
தினமும் காலை 7.30 மணிக்கு கோமாதா பூஜையுடன் தொடங்கும் இந்த வைபவத்தில், மதியம் 12.30 மணிக்கு அன்னதானம், இரவு 8 மணிக்கு, ஸ்ரீ சக்கர மகா மேருவிற்கு கலசாபிஷேகமும், அதைத் தொடர்ந்து பிரசாத விநியோகத்துடன் நிறைவடைகிறது.
ஸ்ரீ ஸ்கந்தாஸ்ரமம் என்பது வெறும் வழிபாட்டுத்தலம் மட்டுமல்ல; அது சித்தர்களின் வாழ்வோடு தொடர்புடைய ஒரு தியான பூமியாகும். அன்னை லலிதா பரமேஸ்வரியின் படைத்தளபதியான மகா வாராஹி தேவிக்கு, தமிழகத்தில் சில இடங்களிலேயே பிரமாண்டமான தனிச் சன்னிதிகள் உள்ளன. அவற்றில் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி பக்தர்களுக்கு கண்கண்ட தெய்வமாக விளங்குவது, இங்குள்ள வாராஹி தேவியாக வழிபடப்படும் துர்க்கையாவாள்.
சுமார் 10 அடி உயர கம்பீரமான திருவுருவத்தோடு, பக்தர்களுக்கு அபய முத்திரை காட்டி, கருணை பொழியும் முகத்துடன் காட்சி அளிக்கிறார். விஷ்ணுவின் வாராஹ அவதாரத்தின் அம்சமாகவும், பராசக்தியின் ஐந்து வடிவங்களில் (பஞ்சமி) ஒன்றாகவும் இங்கு ஆராதிக்கப்படுகிறார்.
தினமும் மதிய வேளையில், அன்னை வாராஹிக்கு திரவியப் பொடி, மஞ்சள், வாசனைத் தயிர், கரும்புச்சாறு, இளநீர், தேன், பஞ்சாமிர்தம், சந்தனம் மற்றும் தூய கங்கை நீர் கொண்டு மகா அபிஷேகம் நடைபெறும்.
குறிப்பாக, அன்னைக்கு மிகவும் பிரியமான தேங்காய்ப்பூ அபிஷேகமும், மாதுளை முத்துக்கள் அபிஷேகமும் இங்கு விசேஷமாகக் கருதப்படுகின்றன.
அமைதியான சூழலில், பிரமாண்ட வடிவில் அருள்பாலிக்கும் அன்னை வாராஹியை ஒன்பது நாட்களும் மனமுருகி தியானிப்பதன் மூலம், வாழ்வில் அஷ்ட ஐஸ்வரியங்களையும், மன அமைதியையும், இறுதியில் ஆன்ம ஞானத்தையும் பெற முடியும் என்பது திண்ணம்.
வாராஹி நவராத்திரி வழிபாட்டில் கலந்துகொண்டு அன்னையை தரிசித்தால் பல அளப்பரிய பலன்கள் கிடைக்கும். வாராஹி தேவி சத்ரு சம்ஹார மூர்த்தி ஆவாள். வாராஹி நவராத்திரியில் அன்னையை வணங்குவதால், அவர்களுக்கு உள்ள மறைமுக எதிர்ப்புகள், பொறாமை மற்றும் கண் திருஷ்டிகள் அனைத்தும் சூரியனைக் கண்ட பனி போல விலகும் என்பது ஐதீகம்.
நிலம், வீடு அல்லது சொத்து சம்பந்தமான வழக்குகளில் சிக்கித் தவிப்பவர்கள், ஸ்கந்தாஸ்ரம வாராஹிக்கு நவராத்திரி நாட்களில் மாதுளை முத்துக்களைச் சமர்ப்பித்து வழிபட்டால் நியாயமான தீர்ப்புகளும், வெற்றிகளும் கிட்டும்.
தீராத கடன் சுமையால் நிம்மதி இழந்தவர்கள், அன்னையின் பாதத்தில் உளுந்து தானியங்களைச் சமர்ப்பித்து, வாராஹி மாலை படித்து வர, பொருளாதார முன்னேற்றமும், கடன் நிவர்த்தியும் உண்டாகும்.
பய உணர்வு, பில்லி-சூனியம் போன்ற எதிர்மறை ஆற்றல்களால் கவலைப்படுபவர்களை அன்னை வாராஹி, கவசமாக இருந்து காக்கிறார்.