சாமி தோப்பு நோக்கி அய்யாவழி பக்தர்கள் ஊர்வலம் 
ஆன்மிகம்

அய்யா வைகுண்டரின் 194-வது அவதார தின விழா.. சாமிதோப்புக்கு அய்யாவழி பக்தர்கள் ஊர்வலம்

ஊர்வலத்தின்போது வழிநெடுகிலும் திரளான பக்தர்கள் வெற்றிலை, பாக்கு, பழம் என சுருள் வைத்து அய்யாவை வழிபட்டனர்.

அய்யா வைகுண்டசாமியின் 194- வது அவதார தினவிழாவை முன்னிட்டு நாகர்கோவில் நாகராஜா திடலில் இருந்து சாமிதோப்புக்கு மாபெரும் மாசி ஊர்வலம் நடைபெற்றது.

அய்யா வைகுண்டசாமியின் அவதார தினவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அவ்வகையில் இந்த ஆண்டு 194-வது அவதார தின விழா நடைபெறுகிறது. அவதார தினத்தை முன்னிட்டு திருச்செந்தூர் மற்றும் திருவனந்தபுரத்தில் இருந்து நேற்று காலை ஊர்வலமாக புறப்பட்ட வாகன பேரணி இரவில் நாகர்கோவில் நாகராஜா கோவில் திடலை வந்தடைந்தது. தொடர்ந்து மாசி மாநாடு நடை பெற்றது. இதில் சிறப்புவிருந்தினர்கள் மற்றும் பல்வேறு சமய தலைவர்கள் கலந்து கொண்டனர்.

முன்னதாக மாலையில் சாமிதோப்பு தலைமைப்பதியில் இருந்து மகாதீபம் கொண்டு செல்லப்பட்டு ஆதலவிளை வைகுண்ட மாமலையில் ஏற்றப்பட்டது.

இதைத் தொடர்ந்து இன்று புதன்கிழமை அதிகாலை 5-மணிக்கு நாகராஜா கோவில் திடலில் இருந்து சாமிதோப்புக்கு அவதார தின மாசி ஊர்வலம் தொடங்கியது. ஊர்வலத்தை தலைமைபதி குரு பால பிரஜாபதி அடிகளால் தொடங்கி வைத்தார். ஊர்வலத்தில் செண்டை மேளம் முழங்க மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அகிலத்திரட்டு ஏந்திய அய்யாவின் வாகனம் முன் சென்றது.

ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான அய்யாவழி பக்தர்கள் பங்கேற்றனர். ‘அய்யா சிவசிவ.. சிவசிவ, அரகர.. அரகரா..’ என்ற பக்தி கோஷத்துடன் சாமிதோப்பை நோக்கி ஊர்வலமாக புறப்பட்டனர். ஊர்வலத்தில் பங்கேற்ற பக்தர்கள் காவி உடை அணிந்து கைகளில் காவிக் கொடிகளை ஏந்தியபடி சென்றனர். ஊர்வலம் கோட்டாறு, சுசீந்திரம், வழுக்கம்பாறை, ஈத்தன்காடு , வடக்கு தாமரை குளம் வழியாக மதியம் சாமிதோப்பு தலைமைப்பதியை வந்தடைந்தது. வழிநெடுகிலும் திரளான பக்தர்கள் வெற்றிலை,பாக்கு, பழம் என சுருள் வைத்து அய்யாவை வழிபட்டனர். ஊர்வலத்தில் சிறுவர், சிறுமிகள் கோலாட்டம் ஆடியபடி சென்றனர்.

இந்த ஊர்வலம் சாமிதோப்பு தலைமைப்பதியை வந்தடைந்ததும் அங்கு அய்யாவுக்குப் பணிவிடை நடைபெற்றது. ஊர்வலத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட தமிழ்நாடு முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டதால் கூட்டம் அலை மோதியது. மேலும், கேரள மாநிலத்தில் இருந்தும் பக்தர்கள் வாகனங்களில் குவிந்தனர்.

ஊர்வலத்தில் கலந்துகொண்ட பக்தர்களுக்கு மோர், தண்ணீர், பானகாரம் உள்ளிட்ட தர்மங்கள் வழங்கப்பட்டது. பல்வேறு இடங்களில் அன்னதானமும் வழங்கப்பட்டது.

இரவு வாகன பவனியும், கலையரங்கில் அய்யாவழி மாநாடு மற்றும் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன. அய்யா வைகுண்டர் அவதார தினத்தையொட்டி சாமிதோப்பிற்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

இதுதவிர, அனைத்து பகுதிகளிலும் உள்ள அய்யாபதிகள் மற்றும் நிழல் தாங்கல்களிலும் அய்யா அவதார தின சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இப்பதிகளில் அய்யாவுக்கு உச்சிப்படிப்பு, உகப்படிப்பு, பணிவிடை, அன்னதர்மம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுடன் வாகன பவனியும் நடைபெற்றது.

SCROLL FOR NEXT