வேல் குத்தி, பால்குடம் எடுத்து பூக்குழி இறங்கிய பக்தர் 
ஆன்மிகம்

வாடிப்பட்டி அருகே பாலதண்டாயுதபாணி கோவில் திருவிழா.. பக்தர்கள் அலகு குத்தி நேர்த்திக்கடன்

வைகாசி திருவிழாவின் ஒரு பகுதியாக இன்று இரவு தொடங்கி விடிய விடிய பூப்பல்லக்கு உற்சவம் நடைபெற உள்ளது.

வாடிப்பட்டி,

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே, தர்மராஜன் கோட்டை அருகே இயற்கை எழில்சூழ்ந்த சிறுமலை அடிவாரப்பகுதியில் கோம்பை கரடு உள்ளது. இங்குள்ள பாலதண்டாயுதபாணி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

நேற்று முன்தினம் வைகாசி விசாகத்தன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை வாடிப்பட்டி மௌன குருசாமி மடத்திலிருந்து பக்தர்கள் அலகு குத்தி, பால்குடம் எடுத்தும், தீமிதித்தும் 4 கிலோ மீட்டர் தூரம் பாதயாத்திரையாக சென்று பாலதண்டாயுதபாணி கோவிலை அடைந்தனர். அங்கு பாலதண்டாயுதபாணிக்கு பாலாபிஷேகம் செய்து நேர்த்திக்கடன் செலுத்தினர். வழியெங்கும் உபயதாரர்கள் ஆங்காங்கே பந்தல்கள் அமைத்து, நீர்மோர், அன்னதானங்கள் வழங்கினார்கள்.

பட்டுப்பல்லக்கு உற்சவம்

இரண்டாம் நாள் நேற்று மாலை 6 மணிக்கு பாலதண்டாயுதபாணி கோயிலில் இருந்து பட்டுப்பல்லக்கில் சுவாமி புறப்பட்டு வல்லப கணபதி கோவிலை அடைந்தார். அங்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பின்னர் அம்பலகாரர் திருக்கண்ணில் அபிஷேகம் நடைபெற்று, ஈ கள்ளர் திருக்கண்ணில் இரவு தங்கினார்.

இன்று மாலை 6 மணிக்கு மேல் சீர் பாதம் தாங்கிகளுக்கு பாத்தியப்பட்ட ஈ கள்ளர் திருக்கண்ணிலிருந்து புறப்பட்டு வல்லப கணபதி கோவிலில் ராமலிங்க சேர்வை தானம் வழங்கப்பட்ட இடத்தில், மல்லிகை மலர்கள் மற்றும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட பூப்பல்லக்கில் எழுந்தருளும் பாலதண்டாயுதபாணி, நள்ளிரவு 12 மணிக்கு அங்கிருந்து புறப்படுகிறார்.

பூப்பல்லக்கு உற்சவம்

வாடிப்பட்டி, ராமராயக்கன்பட்டி, தாதம்பட்டி, நீரேததான், போடிநாயக்கன்பட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு ஊர்வலமாக சென்று ஏராளமான திருக்கண்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். விடிய விடிய நடைபெறும் இந்த பூப்பல்லக்கு உற்சவம் முடிந்து, மறுநாள் மதியம் 2 மணிக்கு கோவிலை சென்றடைவார். இந்த 3 நாட்களும் இரவு நேரங்களில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.