சத்தியமங்கலம்,
சத்தியமங்கலம் அருகே பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் குண்டம் விழா விமரிசையாக நடைபெறும். விழாவில் தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு குண்டம் இறங்கி தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்துவார்கள்
அவ்வகையில் இந்த ஆண்டுக்கான குண்டம் திருவிழா நேற்று முன்தினம் பூச்சாட்டுதலுடன் தொடங்கியது.வரும் 31ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அதிகாலை 4 மணிக்கு பக்தர்கள் குண்டத்தில் இறங்கி தீ மிதிக்கும் சிறப்பு நிகழ்ச்சி நடைபெறும்.
குண்டம் விழாவிற்கான பூச்சாட்டுதலைத் தொடர்ந்து நேற்று இரவு அம்மன் சப்பர ஊர்வலம் தொடங்கியது. பண்ணாரி மாரியம்மன் மற்றும் சருகு மாரியம்மன் ஆகிய உற்சவ அம்மன்கள், அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இந்த ஊர்வலம் இரவு 12 மணிக்கு சிக்கரசம்பாளையம் மாரியம்மன் கோவிலை அடைந்ததும் சப்பரம் இறக்கி வைக்கப்பட்டது.
இன்று காலை 7 மணிக்கு அம்மன் சப்பரம் மாரியம்மன் கோவிலில் இருந்து புறப்பட்டது. கிராமங்கள்தோறும் சென்று பக்தர்களுக்கு அம்மன் அருள்பாலிக்கிறார். சப்பரம் செல்லும் வழியில் தண்ணீரை தெளித்து, கோலமிட்டு அம்மனை வரவேற்று வழிபட்டனர். தங்களுடைய வீட்டுக்கு முன்பு தண்ணீர் தெளித்து, கோலம் போட்டு, தேங்காய், பழம், வெற்றிலை பாக்கு ஆகியவற்றை தட்டில் படைத்து அம்மனை வரவேற்று வழிபட்டார்கள். சிலர் அன்னதானம் செய்தார்கள். அம்மன் சப்பரத்தை சுமந்து வரும் பக்தர்கள் மற்றும் உடன் வருபவர்களுக்கு நீர்மோர், குளிர்பானம் மற்றும் மதிய உணவு வழங்கப்பட்டது.