பரணி தீபம் 
ஆன்மிகம்

திருவண்ணாமலையில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.. திரளான பக்தர்கள் தரிசனம்

ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு 'அண்ணாமலையாருக்கு அரோகரா' என பக்தி கோஷத்துடன் தரிசனம் செய்தனர்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், இந்த ஆண்டு கார்த்திகை தீபத்திருவிழா நவம்பர் 15ம் தேதி, கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

பரணி தீபம்

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று (24.11.2026) அதிகாலை 4 மணிக்கு, நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம், ஆகிய பஞ்ச பூதங்கள், சிவபெருமான் ஒருவனே என்பதை விளக்கும் வகையில், சுவாமி கருவறை எதிரில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.

அண்ணாமலையார் சன்னதியில் ஒரு பெரிய மண் அகல் விளக்கில் நெய் ஊற்றி ஏற்றப்பட்ட தீபத்தைக் கொண்டு ஐந்து தீபங்கள் ஏற்றப்பட்டன. அண்ணாமலையார் கருவறையில் ஏற்றப்பட்ட இந்த பரணி தீபத்தினை சிவாச்சாரியர்கள் ஊர்வலமாக கொண்டு சென்று கோவிலில் உள்ள அம்மன் சன்னதி, விநாயகர் சன்னதி, முருகர் சன்னதி உள்ளிட்ட மற்ற சன்னதிகளில் தீபத்தினை ஏற்றினர். இறுதியாக பைரவர் சன்னதியில் வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு 'அண்ணாமலையாருக்கு அரோகரா' என பக்தி கோஷத்துடன் தரிசனம் செய்தனர்.

மகா தீபம்

இன்று மாலை 6.00 மணிக்கு 2,668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட உள்ளது.

தீபத் திருவிழாவையொட்டி சுவாமி சன்னதி முழுவதும் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. கோவில் வளாகம் முழுவதும், வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலிக்கிறது. லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்துள்ளனர்.

SCROLL FOR NEXT