செங்கல்பட்டு,
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் உள்ள தலசயன பெருமாள் கோவிலில் பூதத்தாழ்வார் உற்சவத்தின் 9-ம் நாளான இன்று திருத்தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு மகிழ்ந்தனர்.
108 திவ்ய தேசங்களில் ஒன்றான மகாபலிபுரம் ஸ்ரீ தலசயன பெருமாள் கோவிலில், பூதத்தாழ்வார் அவதார திருவிழா உற்சவத்தின் 9-ம் நாளான இன்று (செவ்வாய்க்கிழமை) காலை திருத்தேர் உற்சவம் மிகக் கோலாகலமாக நடைபெற்றது. இவ்விழாவை முன்னிட்டு, உற்சவர் தலசயன பெருமாள் மற்றும் பூதத்தாழ்வாருக்கு அதிகாலையிலேயே சிறப்பு திருமஞ்சனமும், விசேஷ அலங்கார ஆராதனைகளும் செய்யப்பட்டன. இதனைத் தொடர்ந்து, வண்ண மலர்களாலும் தோரணங்களாலும் அலங்கரிக்கப்பட்ட பிரம்மாண்ட தேரில் சுவாமி எழுந்தருளினார்.
காலை சுபமுகூர்த்தத்தில் தொடங்கிய இந்த தேரோட்டத்தில், உள்ளூர் மக்கள் மட்டுமின்றி வெளியூர்களிலிருந்தும் வந்திருந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். "கோவிந்தா... கோவிந்தா..." என பக்தி முழக்கமிட்டு, திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து பக்தி பரவசத்துடன் வழிபட்டனர்.
மாமல்லபுரத்தின் முக்கிய நான்கு மாட வீதிகள் வழியாக வலம் வந்த தேருக்கு, வழிநெடுகிலும் பக்தர்கள் கற்பூர ஆரத்தி எடுத்து அர்ச்சனை செய்து சுவாமி தரிசனம் செய்தனர். திருவிழாவை முன்னிட்டு வந்திருந்த பக்தர்கள் அனைவருக்கும் நீர்மோர், குளிர்பானங்கள் மற்றும் அன்னதான பிரசாதங்கள் சிறப்பான முறையில் வழங்கப்பட்டன.
பூதத்தாழ்வாரின் அவதார தினமான நாளை (ஐப்பசி அவிட்டம்) திருவிழாவின் 10-ம் நாள் நிறைவு விழா ஆகும். இதனால் அதிகாலை முதலே சிறப்பு சாற்றுமுறை மற்றும் மகாபலிபுரத்தில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க குடைவரை கோவிலுக்கு சுவாமி எழுந்தருளும் முக்கிய வழிபாடுகள் நடைபெற உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.