பிரம்மோற்சவ விழா கொடியேற்றம் 
ஆன்மிகம்

பொள்ளாச்சி கரிவரதராஜ பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா

பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வாக மே 1-ந்தேதி தேரோட்டம் நடைபெறுகிறது.

பொள்ளாச்சி.

பொள்ளாச்சி கரிவரதராஜ பெருமாள் கோவிலில் 50-வது ஆண்டு பிரம்மோற்சவ விழா தொடங்கியது. விழாவையொட்டி கடந்த 22-ந்தேதி மாலை 6 மணிக்கு அனுக்ஞை, விசவக்‌ஷேனாராதனம், புண்யாகவாஜனம், வாஸ்து சாந்தி உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன. நேற்று காலை 7.35 மணிக்கு மேல் 9 மணிக்குள் கொடியேற்றம் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

மாலை 3 மணிக்கு புண்யாகவாஜனம், யாகசாலை பூஜை தொடக்கம், மாலை 6 மணிக்கு ராஜ அலங்காரத்தில் சாமி திருவீதி உலா நடைபெற்றது. விழா நாட்களில் தினமும் காலையிலும் மாலையிலும் வாகன சேவை நடைபெறுகிறது.

வருகிற 29-ந்தேதி காலை 9 மணிக்கு திருப்பல்லக்கில் மோகினி அலங்காரத்தில் பெருமாள் திருவீதி உலா செல்லும் நிகழ்ச்சி நடக்கிறது. மாலை 6 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. வருகிற 30-ந்தேதி தவழ்ந்த கிருஷ்ணன், வெண்ணெய் தாழி திருப்பல்லக்கிலும், மாலையில் பெருமாள் ராஜ அலங்காரத்துடன் குதிரை வாகனத்திலும் திருவீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

விழாவின் முக்கிய நிகழ்வாக மே 1-ந்தேதி தேரோட்டம் நடைபெறுகிறது. அன்றைய தினம் காலை 9 மணிக்கு மேல் 10.15 மணிக்குள் உற்சவர் திருத்தேருக்கு எழுந்தருள்கிறார். அதன்பின்னர் தேர் வடம் பிடிக்கப்படுகிறது. ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தேர் இழுத்து வழிபடுவார்கள். மாலை 6 மணிக்கு திருவீதி உலா செல்லும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. வருகிற 2-ந்தேதி தீாத்தவாரி, வருகிற 3-ந்தேி விடையாற்றி நிகழ்ச்சியும் நடக்கிறது.