திருப்பதி,
திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. இதனையொட்டி கோவிந்தராஜசுவாமி தினமும் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். இதன் 8-வது நாளான நேற்று முக்கிய நிகழ்வான மகா ரதோற்சவம் என்ற மகா தேரோட்டம் நடைபெற்றது.
தேரில் சிறப்பு அலங்காரத்தில் தேவியருடன் கோவிந்தராஜசுவாமி எழுந்தருளினார். தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் 'கோவிந்தா... 'கோவிந்தா' என பக்திப் பரவசத்துடன் முழக்கமிட்டபடி, பிரம்மாண்டமான தேரை கோவில் மாடவீதிகளில் வடம்பிடித்து இழுத்துச் சென்றனர்.
தேரோட்டமானது உடலைத் தேராகவும் ஆத்மாவை அதன் அதிபதியாகவும் விளக்கும் தத்துவத்தை குறிப்பதாக பட்டாச்சாரியார்கள் தெரிவித்தனர்.
தேரோட்டம் நடைபெற்ற பாதை முழுவதும் பக்தர்கள் தேங்காய் உடைத்தும், கற்பூர ஆரத்தி செலுத்தியும் தங்களின் பக்தியை வெளிப்படுத்தினர்.
தேர் நிலையத்தை அடைந்து சுவாமி கோவிலுக்கு சென்ற பின்னர் உற்சவ மூர்த்திகளுக்கு ஸ்நாபன திருமஞ்சனம் நடைபெற்றது.
மாலையில் கோவிந்தராஜ சுவாமி கல்கி அவதார அலங்காரத்தில் அஸ்வ வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வேத மந்திரங்கள், மங்கள வாத்தியங்கள், கோலாட்ட நிகழ்ச்சிகளுடன் வீதி உலா நடந்தது.
பிரம்மோற்சவ விழாவின் நிறைவு நிகழ்வாக இன்று கபில தீர்த்தத்தில் (திருக்குளம்) சக்கர ஸ்நானம் நடைபெற்றது. இதையொட்டி திருக்குளத்தில் தேவியர்களுடன் எழுந்தருளிய கோவிந்தராஜ சுவாமி மற்றும் பகவானின் திவ்ய ஆயுதமான சுதர்சன சக்கரத்திற்கு சிறப்பு திருமஞ்சனம் (நீராட்டு) நடைபெற்றது. பின்னர் துளசி மாலைகளாலும் மலர் மாலைகளாலும் அலங்காரம் செய்யப்பட்டது.
அதன்பின், சுதர்சன சக்கரத்தை திருக்குளத்தில் மூன்று முறை மூழ்கச் செய்து சக்கர ஸ்னானம் நடைபெற்றது. இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு திருக்குளத்தில் புனித நீராடினர். சக்கரஸ்நானம் நிகழ்ச்சியுடன் பிரம்மோற்சவம் நிறைவு பெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை தேவஸ்தான அதிகாரிகள் செய்திருந்தனர்.