தேரோட்டம் 
ஆன்மிகம்

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் பிரமோற்சவ தேரோட்டம் கோலாகலம்

ஒரே நேரத்தில் 5 தேர்கள் வீதியுலா வந்ததை தரிசனம் செய்வதற்காக தேரோடும் வீதியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டிருந்தனர்.

காரைக்கால்,

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு ஸ்ரீ தா்பாரண்யேஸ்வரா் கோவிலில் வைகாசி பிரம்மோற்சவ விழா 13ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி விமரிசையாக நடைபெற்று வருகிறது. நாள்தோறும் சிறப்பு வழிபாடுகள், சுவாமி வீதியுலா நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது.

இதையொட்டி நேற்று செண்பக தியாகராஜ சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இன்று அதிகாலையில் சிறப்பு பூஜைக்கு பிறகு சுவாமி, அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் எழுந்தருளினார். இதேபோல் மற்றொரு தேரில் அம்பாள் எழுந்தருளினார். அதைத் தொடர்ந்து விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் தனித்தனி தேர்களில் எழுந்தருளினர்.

ஒரே நேரத்தில் 5 தேர்கள்

சிறப்பு பூஜை செய்து மகா தீபாராதனைக்கு பிறகு தேரோட்டம் தொடங்கியது. தருமபுரம் ஆதீன கட்டளை ஸ்ரீமத் சிவகுருநாத தம்பிரான் சுவாமிகள், திருநள்ளாறு சட்டமன்ற உறுப்பினர் ராஜசேகர், மாவட்ட ஆட்சியர் இஷிதா ராட்டி, கோவில் நிர்வாக அதிகாரி சுப்பிரமணி ஆகியோர் வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு பக்தி முழக்கம் எழுப்பியபடி தேர் இழுத்தனர்.

ஒரே நேரத்தில் 5 தேர்கள் (சுவாமி, அம்பாள், விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர்) வீதியுலா வந்ததைக் காண, தேரோடும் வீதியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டிருந்தனர்.

சனி பகவான் வீதிஉலா

நாளை 28ஆம் தேதி இரவு சனி பகவான் தங்க காக்கை வாகனத்தில் வீதிஉலாவும், 29ஆம் தேதி தெப்ப உற்சவமும் நடைபெறும்.

தேரோட்டத்தை முன்னிட்டு காரைக்கால் மாவட்டத்தில் அனைத்து அரசு அலுவலகங்கள், அரசு சாா்பு நிறுவனங்கள், கல்வி நிறுவனங்களுக்கு இன்று ஒரு நாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.