தீமைகளை அழித்து உலகை காப்பதற்காக உருவெடுத்த பார்வதி தேவியின் உக்கிரமான அம்சமே சண்டி தேவி.
சண்டி தேவி 18 கரங்களுடன், ஒவ்வொரு கரமும் வெவ்வேறு ஆயுதத்தைக் கொண்டிருப்பதாக தேவி மகாத்மியத்தில் சொல்லப்பட்டுள்ளது. அந்த தேவி, பிரபஞ்சத்தின் அன்னையாகவும், பெண் சக்தி மற்றும் ஆற்றலின் வடிவமாகவும் கருதப்படுகிறாள்.
சகல தெய்வங்களின் அம்சமான சண்டி தேவியை ஆராதித்து செய்யப்படுவதுதான் சண்டி ஹோமம் (சண்டி யாகம்). சண்டி ஹேமத்தைச் செய்தாலோ அல்லது அதில் கலந்து கொண்டாலோ சகல துக்கங்களில் இருந்தும் விடுபடலாம். தீய சக்திகள், எதிரிகளிடம் இருந்தும் தப்பித்து, வெல்லலாம் என்பது நம்பிக்கை. அன்னையின் அனுக்ரகத்தால் ஆயுள், ஆரோக்கியம், அபிவிருத்தி, ஐஸ்வர்யம், அதிகாரம் போன்றவை பெறலாம். இவ்வாறு பக்தர்கள் தங்களது வேண்டுதல்களை இந்த சக்தி வாய்ந்த சண்டி ஹோமத்தால் நிறைவேற்றிக் கொள்ள முடியும் என்பது ஆன்மிக நம்பிக்கை.
ஜாதகத்தில் கடுமையான தோஷங்கள் அல்லது கிரக நிலைகளின் தீய விளைவுகளால் அவதிப்படும் நபர்கள், சண்டி ஹோமம் செய்தால் நிவரணம் கிடைக்கும். இதேபோல் மாந்திரீகம், சாபங்கள் மற்றும் எதிர்மறை ஆற்றலால் பாதிக்கப்பட்டிருப்பதாக சந்தேகம் எழுந்தால், அந்தத் தீய தாக்கத்திலிருந்து விடுபடுவதற்காக சண்டி ஹோமம் செய்கிறார்கள்.
இதுதவிர அறிந்தோ அறியாமலோ செய்த தவறுகளுக்காக தேவியிடம் பிராயச்சித்தம் அல்லது மன்னிப்பு பெற விரும்புபவர்களும் இந்த ஹோமத்தை செய்கிறார்கள். உலக நன்மைக்காககவும் மகா சண்டி யாகத்தை நடத்துகிறார்கள்.
பிரத்யங்கிரா தேவி கோவில், அங்காள பரமேஸ்வரி ஆலயம், காமாட்சி அம்மன் கோவில், காளியம்மன் கோவில், துர்கா பரமேஸ்வரி கோவில், மூகாம்பிகா கோவில், சாமுண்டேஸ்வரி கோவில் மற்றும் துர்கா அல்லது பார்வதி தேவி எழுந்தருளியிருக்கும் அனைத்து முக்கிய கோவில்களிலும் சண்டி ஹோமம் நடத்தப்படுகிறது.