சந்திரசேகரர் தெப்ப உற்சவம் 
ஆன்மிகம்

திருவண்ணாமலையில் சந்திரசேகரர் தெப்ப உற்சவம்.. திரளான பக்தர்கள் தரிசனம்

மகா தீபத்தையொட்டி திருவண்ணாமலையில் 40 லட்சம் பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலையில் நடைபெற்று வரும் கார்த்திகை தீபத் திருவிழாவில் நேற்று இரவில் அய்யங்குளத்தில் தெப்ப உற்சவம் நடைபெற்றது. தெப்பத்தில் எழுந்தருளிய சுவாமி சந்திரசேகரரை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

மகா தீபம்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மகா தீபம் நேற்று முன்தினம் மாலை 6 மணி அளவில் கோவில் பின்புறம் உள்ள 2,668 அடி உயர மலை உச்சியில் ஏற்றப்பட்டது.

கார்த்திகை மாத பவுர்ணமி கிரிவலத்திற்கும், மகா தீபத்தை காணவும் 23-ந் தேதி இரவில் இருந்தே ஏராளமான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வரத்தொடங்கினர். நேற்று முன்தினம் அதிகாலை முதல் பக்தர்கள் கிரிவலம் செல்லத்தொடங்கினர். நேரம் செல்ல, செல்ல பக்தர்கள் கூட் டம் அதிகரிக்க தொடங்கியது. மாலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். இரவில் கோவிலில் மகா தீபம் நிகழ்ச்சி முடிந்த பின்னர் கொடியிறக்கம் நடைபெற்றது.

பஞ்சமூர்த்திகள் வீதிஉலா

அதன்பின்னர் இரவில் பஞ்சமூர்த்திகளான விநாயகர் மூஷிக வாகனத்திலும், வள்ளி தெய்வானையுடன் முருகர் மயில் வாகனத்திலும், உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரர் தங்க ரிஷப வாகனத்திலும், பராசக்தி அம்மன் ரிஷப வாகனத்திலும், சண்டிகேஸ்வரர் சின்ன அதிகார நந்தி வாகனத்திலும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி மாட வீதிகளில் உலா வந்தனர்.

நேற்று முன்தினம் தொடங்கி நேற்று காலை வரையில் விடிய, விடிய பக்தர்கள் கிரிவலம் சென்றனர். மகா தீபத் திருநாளில் சுமார் 40 லட்சம் பக்தர்கள் கிரிவலம் சென்றதாக கூறப்படுகிறது. நேற்று காலை 6 மணி அளவிலேயே வழக்கத்தை விட கிரிவலம் செல்லும் பக்தர்களின் கூட்டம் குறைந்தது. குறைந்த அளவிலான பக்தர்கள் தனித்தனியாக கிரிவலம் சென்றனர். கிரிவலம் சென்ற பக்தர்கள் அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்ய குவிந்தனர்.

ராஜகோபுரம் வழியாக பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். சுமார் 5 மணி நேரத்திற்கும் மேல் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். நேற்று பகலில் விட்டு, விட்டு மழை பெய்தது. மழையையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் கையில் குடை பிடித்தபடியும், மழை கோட்டு அணிந்தபடியும் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

தெப்ப உற்சவம்

கார்த்திகை தீப திருவிழாவின் மற்றொரு முக்கிய நிகழ்ச்சியாக தெப்ப உற்சவம் 3 நாட்கள் நடக்கும். அதன்படி அருணாசலேஸ்வரர் கோவில் அருகில் உள்ள அய்யங்குளத்தில் முதல் நாள் சந்திரசேகரர் தெப்ப உற்சவம் நேற்று இரவு நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் அம்பாளுடன் சந்திரசேகரர் எழுந்தருளி, திருக்குளத்தில் 3 முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இன்று (வியாழக்கிழமை) இரவு பராசக்தி அம்மன் தெப்ப உற்சவமும், நாளை (வெள்ளிக்கிழமை) சுப்பிரமணியர் தெப்ப உற்சவமும் நடக்கிறது. நாளை மறுநாள் (சனிக்கிழமை) சண்டிகேஸ்வரர் உற்சவத்துடன் கார்த்திகை தீபத் திருவிழா நிறைவு பெறுகிறது.

SCROLL FOR NEXT