ஆன்மிகம்

‘சார் தாம்’ யாத்திரை 19-ந்தேதி தொடக்கம் - 18.25 லட்சம் பேர் முன்பதிவு

‘சார் தாம்’ யாத்திரை 19-ந்தேதி தொடக்கம் - 18.25 லட்சம் பேர் முன்பதிவு

டேராடூன்,

இந்துக்களின் நான்கு புனித தளங்களான பத்ரிநாத், கேதர்நாத், கங்கோத்ரி மற்றும் யமுனோத்ரி ஆகிய தளங்களுக்குச் செல்லும் யாத்திரையானது 'சார் தாம்' யாத்திரை என்று அழைக்கப்படுகிறது. இந்த ஆண்டிற்கான 'சார் தாம்' யாத்திரைப் பயணம் வரும் 19-ந்தேதி தொடங்குகிறது.

ஆண்டுதோறும் 6 மாதங்கள் மட்டுமே பக்தர்கள் இந்த கோவில்களுக்குச் சென்று சிவபெருமானை தரிசிக்க முடியும். குளிர்காலங்களில் குகைக்கோவில்கள் மூடப்பட்டுவிடும். மேலும் பாதைகள் பனியால் மூடப்பட்டிருக்கும் என்பதால் பாத யாத்திரை செல்ல தடை விதிக்கப்படும்.

யாத்திரை செல்லும் பக்தர்கள் ஆன்லைன் மூலமாகவோ, அல்லது நேரடியாகவோ முன்பதிவு செய்ய வேண்டியது அவசியமாகும். அந்த வகையில், நடப்பாண்டு ‘சார் தாம்’ யாத்திரைக்கான ஆன்லைன் முன்பதிவு கடந்த மார்ச் 6-ந்தேதி தொடங்கியது. ஆன்லைனில் இதுவரை மொத்தம் 18.23 லட்சம் பேர் யாத்திரைப் பயணத்திற்காக முன்பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், ‘சார் தாம்’ யாத்திரைக்கான நேரடி முன்பதிவுகள் இன்று தொடங்கப்பட்டன. அதன்படி முதல் நாளான இன்று 2,173 பக்தர்கள் யாத்திரைப் பயணத்திற்காக முன்பதிவு செய்துள்ளனர். இதன் மூலம் ஆன்லைன் மற்றும் நேரடி முன்பதிவுகள் மூலம் இதுவரை மொத்தம் 18.25 லட்சம் பேர் ‘சார் தாம்’ யாத்திரைக்காக முன்பதிவு செய்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உத்தர்காசி மாவட்டத்தில் உள்ள கங்கோத்ரி மற்றும் யமுனோத்ரி கோவில்கள், அட்சய திரிதியை தினத்தை முன்னிட்டு வரும் 19-ந்தேதி திறக்கப்பட உள்ளன. அதனை தொடர்ந்து ருத்ரபிரயாக் மாவட்டத்தில் உள்ள கேதர்நாத் கோவில் வரும் 22-ந்தேதியும், சமோலி மாவட்டத்தில் உள்ள பத்ரிநாத் கோவில் 23-ந்தேதியும் திறக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.