திருவாரூர்,
சப்தவிடங்க தலங்களில் ஒன்றான திருக்காரவாசல் ஆதிவிடங்க தியாகராஜர் கோவிலில் வைகாசி விசாக திருவிழா கடந்த 20-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனையடுத்து பஞ்சமூர்த்தி வீதியுலா, சந்திரசேகர் பட்டோற்சவம், 108 சங்காபிஷேகம் கண்ணாபிரநாத சாமி, கைலாசநாயகி மற்றும் தியாகராஜர் சாமிக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது. பூத, யானை, ரிஷப வாகன வீதியுலா நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று நடைபெற்றது. இதையொட்டி கோவிலில் இருந்து சிறப்பு அலங்காரத்தில் தியாகராஜர் புறப்பட்டு தேரில் எழுந்தருளினார். இதனையடுத்து தேர் சக்கரங்களுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு, தேங்காய் உடைத்தனர். பின்னர் காலை 7.35 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு ‘ஆரூரா, தியாகேசா’ என பக்தி முழக்கங்களுடன் வடம் பிடித்து தேர் இழுத்தனர். தேர் நான்கு வீதிகளில் வலம் வந்து நிலையை அடைந்தது. இதனை தொடர்ந்து நீலோத்தம்பாள் எழுந்தருளிய தேர் உற்சவமும் நடைபெற்றது.
தேரோட்ட விழாவையொட்டி கிராமமே விழாகோலம் பூண்டது. இந்த விழாவை மக்கள் உற்சாகத்துடன் கொண்டாடினர்.
தேரைத் தொடர்ந்து பாதுகாப்பு கருதி தீயணைப்பு வாகனம் வந்தது. திருவாரூர் தாலுகா போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.