தேரோட்டம் 
ஆன்மிகம்

சுவாமிமலை முருகன் கோவிலில் விமரிசையாக நடைபெற்ற தேரோட்டம்

தேரோட்டத்தின்போது ஏராளமான பக்தர்கள் அர்ச்சனை செய்து முருகப்பெருமானை வழிபட்டனர்.

சுவாமிமலை,

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே சுவாமிமலையில் சுவாமிநாத சுவாமி கோவில் அமைந்துள்ளது. இத்தலம் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 4-ம் படை வீடாக விளங்குகிறது.

பல்வேறு ஆன்மிக சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை பெருவிழா 11 நாட்கள் வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான விழா கடந்த 15-ந்தேதி விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. 16-ந்தேதி கொடியேற்றப்பட்டு, வள்ளி, தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமி பரிவாரங்களுடன் மலை கோவிலில் இருந்து உற்சவ மண்டபம் எழுந்தருளல் நிகழ்ச்சியும், இரவு யாகசாலை பூஜையுடன் சுவாமி திருவீதி உலாவும் நடந்தது.

தேரோட்டம்

விழா நாட்களில் தினமும் காலை படிச்சட்டத்தில் சுவாமி திருவீதி உலாவும், மாலை இடும்ப வாகனம், பூத வாகனம், ஆட்டுக்கிடா வாகனம், யானை வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சுவாமி திருவீதி உலாவும் நடைபெற்று வந்தது.

விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) நடந்தது. சிறப்பு மலர் அலங்காரத்தில் வள்ளி, தேவசேனா சமேத சுப்பிரமணியர் தேரில் எழுந்தருளியதும், தேர் வடம் பிடிக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் ‘அரோகரா’ கோஷம் எழுப்பியபடி வடம் பிடித்து தேர் இழுத்தனர். வழிநெடுகிலும் ஏராளமான பக்தர்கள் அர்ச்சனை செய்து முருகப்பெருமானை வழிபட்டனர். தேரானது 4 ரத வீதிகளில் அசைந்தாடியபடி வலம் வந்தவாறு நிலையை அடைந்தது.

சிறப்பு பஸ்கள் இயக்கம்

தேரோட்டத்தை முன்னிட்டு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பக்தர்களின் வசதிக்காக அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தன. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக கும்பகோணம் கோட்டம் சார்பில் சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டன.

இன்று இரவு தங்கமயில் வாகனத்தில் சுவாமி வீதி உலாவும், சொக்கப்பனை கொளுத்துதல் எனும் தீபக்காட்சி நடைபெறுகிறது. தொடர்ந்து, நாளை (புதன்கிழமை) காவிரியில் தீர்த்தவாரியும், 26-ந்தேதி ஏனைய பரிவாரங்களுடன் சுவாமி யதாஸ்தானம் சேர்தல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

SCROLL FOR NEXT