பூரி:
ஒடிசா மாநிலம் பூரி நகரில் நடைபெறும் ஜெகநாதர் ரத யாத்திரை உலகப்புகழ் பெற்றது. இந்த ரத யாத்திரையைக் காண நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பூரி நகரில் ஒன்றுகூடுவார்கள். வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் இந்த வைபவத்தை காண பூரி நகருக்கு அதிக அளவில் வருகை தருவார்கள்.
அவ்வகையில் இந்த ஆண்டின் ரத யாத்திரையானது அடுத்த மாதம் (ஜூலை) 16-ம் தேதி தொடங்க உள்ளது. அலங்கரிக்கப்பட்ட தேர்களில் ஜெகநாதர், பாலபத்திரர் (பலராமர்), சுபத்ரா தேவி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தபடி யாத்திரையை தொடங்குவார்கள்.
தேர்கள் சுமார் 3 கி.மீ. தொலைவில் உள்ள குண்டிச்சா கோவிலை (குந்திச்சா கோவில்) சென்றடைந்ததும் அங்கு ஒரு வார காலம் ஜெகநாதர் ஓய்வெடுப்பார். பின்னர் மீண்டும் தேர்கள் புறப்பட்டு ஜெகநாதர் கோவிலை வந்தடைந்ததும் ரத யாத்திரை நிறைவுபெறும். 9 நாட்கள் இந்த திருவிழா நடைபெறும்.
ரத யாத்திரைக்காக ஒவ்வொரு ஆண்டும் மூலவர்கள் ஜெகநாதர், பாலபத்திரர் (பலராமர்), சுபத்ரா தேவி ஆகியோருக்கு புதிய தேர்கள் செய்யப்படுவது இந்த திருவிழாவின் சிறப்பு அம்சம் ஆகும். அதன்படி இந்த ஆண்டு புதிய தேர்களின் கட்டுமானப் பணி முழுவிச்சில் நடைபெற்று வருகிறது.
தேர்களின் அடிப்பகுதி, சக்கரங்கள் மற்றும் முக்கிய பாகங்கள் பொருத்தப்பட்டுள்ள நிலையில், இப்போது கட்டுமான பணி முக்கிய கட்டத்தை எட்டியிருக்கிறது. எனவே, திட்டமிட்டபடி பணிகள் நிறைவுபெற்று விரைவில் தேர்கள் ஒப்படைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.