செங்கம்,
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் நகரில் உள்ள ருக்மணி சத்யபாமா சமேத வேணுகோபால பார்த் தசாரதி பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. விழாவின் 7-ம் நாளான நேற்று தேரோட்டம் நடந்தது.
தேரோட்டத்தை முன்னிட்டு மூலவர்களான ருக்மணி சத்யபாமா சமேத வேணுகோபால பார்த்தசாரதி பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து மலர்களால் அலங்கரித்து தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து உற்சவர், தேரில் நிலைநிறுத்தப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. அதன்பின்னர் தேர் வடம் பிடிக்கப்பட்டது.
விழாவில் செங்கம் சட்டமன்ற உறுப்பினர் அக்ரி டி.எஸ்.வேலு, சக்தி பாலிடெக்னிக் கல்லூரி தாளாளர் அக்ரி எஸ்.வெங்கடாஜலபதி மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை செங்கம் வட்ட பண்டரெட்டியார்கள் சமூகம் சார்பில் செய்யப்பட்டு இருந்தது.