மிளகாய் யாகத்தில் பங்கேற்ற பக்தர்கள் 
ஆன்மிகம்

ஓசூர் பிரத்தியங்கிரா தேவி கோவிலில் மிளகாய் யாகம்

பக்தர்கள் காய்ந்த மிளகாய் வத்தல்களை எடுத்து தலையை சுற்றி, யாகத் தீயில் போட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர்.

ஓசூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மோரனப்பள்ளி பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ ராகு ஸ்ரீ கேது அதர்வண ஸ்ரீ மகா பிரத்தியங்கிரா தேவி கோவிலில், ஒவ்வொரு பவுர்ணமி தினத்தன்றும் மிளகாய் வத்தல் யாகம் நடைபெறுவது வழக்கம்.

அந்த வகையில், வைகாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு மிளகாய் வத்தல் யாகம் நடைபெற்றது. இதையொட்டி கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. இரவில் ஹோமகுண்டத்தில் அக்னி வளர்க்கப்பட்டு, மிளகாய் வத்தல் யாகம் நடைபெற்றது.

ராகு-கேது தோஷங்கள் நீங்கவும், கண் திருஷ்டி கழியவும், பக்தர்கள் காய்ந்த மிளகாய் வத்தல்களைத் தங்கள் தலைக்கு இடமும் வலமும் சுற்றி யாகத் தீயில் போட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர்.

சிறப்பு அலங்காரம்

மூலவர் ஸ்ரீ மகா பிரத்தியங்கிரா தேவிக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்து, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இந்த சிறப்பு யாகத்தில் தமிழகம் மட்டுமின்றி, அண்டை மாநிலங்களான கர்நாடகா மற்றும் ஆந்திராவில் இருந்தும் பக்தர்கள் வருகை தந்து அம்மனை தரிசித்தனர்.