சித்திரை தேர்த்திருவிழா கொடியேற்றம். (உள்படம்:- சிறப்பு அலங்காரத்தில் நம்பெருமாள்). 
ஆன்மிகம்

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேர் திருவிழா கொடியேற்றம்

சித்திரை தேர் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சித்திரை தேரோட்டம் வருகிற 14-ந் தேதி நடக்கிறது.

சித்திரை தேர் திருவிழா

108 வைணவ தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என்று போற்றப்படுவதுமான ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டு முழுவதும் திருவிழா நடைபெறும். இந்த விழாக்களில் சித்திரை தேர் திருவிழாவும் ஒன்று.

அவ்வகையில் இந்த ஆண்டுக்கான விழா கடந்த 3-ந்தேதி காலை 9.30 மணி அளவில் வெள்ளை கோபுரம் அருகே உள்ள தேரில் முகூர்த்தக் கால் நடும் நிகழ்ச்சியோடு தொடங்கியது.

கொடியேற்றம்

நேற்று சித்திரை தேர் திருவிழாவின் கொடியேற்றம் நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை 4 மணி அளவில் கருடக்கொடிக்கு பட்டாச்சாரியார்கள் மற்றும் அர்ச்சகர்களால் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு மேளதாளம் முழங்க கொடியேற்றப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். இந்த விழா 11 நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படும்.

தங்க குதிரை

விழாவையொட்டி தினமும் வாகன சேவை நடைபெறுகிறது. கற்பகம், யாழி, கருடன், அனு மந்தம், யானை, தங்க குதிரை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் நம்பெருமாள் எழுந்தருளி வீதி உலா வந்து அருள்பாலிக்கிறார்.

விழாவின் சிகர நிகழ்ச்சியான சித்திரை தேரோட்டம் வருகிற 14-ந் தேதி நடக்கிறது. இதையொட்டி அன்று அதிகாலை 4 மணி அளவில் நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு 4.30 மணி அளவில் தேர்முட்டி மண்டபத்திற்கு வந்தடைகிறார். அதன்பின் 5 மணிக்கு தேரில் எழுந்தருளி வலம் வருகிறார்.

விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் சிவராம்குமார், கண்காணிப்பாளர் வெங்கடேசன், தலைமை அர்ச்சகர் சுந்தர் பட்டர் மற்றும் கோவில் நிர்வாகிகள், ஊழியர்கள் செய்து வருகின்றனர்.