ஶ்ரீவைகுண்டம்,
108 வைணவ திவ்ய தேசங்களில் நவதிருப்பதிகள் என அழைக்கப்படும் 9 திருக்கோவில்கள் தூத்துக்குடி மாவட்டம் தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ளன. அதில் நம்மாழ்வாரால் பாடல் பெற்ற திருத்தலம் ஸ்ரீவைகுண்டம் அருள்மிகு கள்ளபிரான் சுவாமி திருக்கோவிலாகும். நவ திருப்பதிகளில் முதல் தலமாகவும் நவகோள்களில் சூரிய அம்சமாகவும் விளங்குகின்றது. மூலவா் ஸ்ரீவைகுண்ட நாதன் என்றும் உற்சவா் கள்ளபிரான்.
இத்திருக்கோவிலில் சித்திரை திருவிழா ஆண்டுதோறும் வெகு சிறப்பாக நடைபெறும். அதன்படி இந்த வருடத்திற்கான சித்திரை திருவிழா கடந்த 9ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
10 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் 5ம் திருநாளான நேற்று காலையில் ஸ்ரீவைகுண்டம் - கள்ளா்பிரான், ஆழ்வாா்திருநகரி-பொலிந்து நின்ற பெருமாள், திருப்புளிங்குடி-காய்சினி வேந்த பெருமாள், நத்தம்-எம் இடா் கடிவான் ஆகியோருக்கு சுவாமி நம்மாழ்வாரால் மங்களாசாசனம் நடைபெற்றது.
பின்னா் மாலையில் தாமிரபரணி நதியில் இருந்து தீா்த்தம் எடுத்து வரப்பட்டு அனைத்து பெருமாள்களுக்கும் வைதிக முறைப்படி நவகலச திருமஞ்சனம் நடைபெற்றது. அதனை தொடா்ந்து இரவில் கருட வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீகள்ளா்பிரான், ஸ்ரீபொலிந்து நின்ற பிரான், ஸ்ரீ காய்சினிவேந்தா், ஸ்ரீ எம் இடா் கடிவான் ஆகியோா் காட்சி அளித்தனா். ஆழ்வாா்திருநகரி எம்பெருமானார் ஜீயா் சுவாமிகள், கீழத் திருமாளிகை ரங்கராஜன் சுவாமிகள் உட்பட அத்யாபக கோஷ்டியினா் திருவாய்மொழி பாடினா். ஹம்ஸ வாகனத்தில் எழுந்தருளியுள்ள சுவாமி நம்மாழ்வாருக்கு குடைவரை பெருவாயிலில் கற்பூர ஆரத்தியுடன் எதிா்சேவை நடைபெற்றது.
தொடா்ந்து 4 கருட வாகனங்களில் பெருமாள்கள் மற்றும் ஹம்ஸ வாகனத்தில் நம்மாழ்வாா் திருவீதி புறப்பாடு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். ஏப்ரல் 17 ந்தேதி தேரோட்டம் நடைபெறுகிறது.