திருச்சி,
திருச்சி, பெரிய மிளகுபாறையில் உள்ள புத்தடி மாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 3-ந்தேதி பூச்சொரிதலுடன் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பால் குட ஊர்வலம் நேற்று காலையில் நடந்தது. இதனையொட்டி அதிகாலை 4.30 மணிக்கு காவிரி ஆறு அய்யாளம்மன் படித்துறையில் இருந்து பால் குடம், தீர்த்தக்குடம், அக்னி சட்டி, முளைப்பாரி எடுத்தபடியும், அலகு குத்தியபடியும் மேளதாளங்கள் முழங்க ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு ஊர்வலமாக சென்றனர்.
பின்னர் இரவு 10 மணிக்கு உய்யக்கொண்டான் ஆறு அருகில் இருந்து மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட முத்து பல்லக்கில் அம்மன் கோவில் வந்து அடைந்தார். அதனைத் தொடர்ந்து பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தன. இன்று (திங்கட்கிழமை) காலையில் கிடா வெட்டுதல் நிகழ்ச்சி நடந்தது.
இதேபோல் தா.பேட்டை செங்குந்தர் மாரியம்மன் கோவிலில் குளுமை பூஜை விழா மற்றும் தீர்த்தக்குடம் ஊர்வலம் நடைபெற்றது. விழாவையொட்டி செவந்தாம்பட்டி மதுரை வீரன் சுவாமி கோவிலில் இருந்து மேளதாளங்கள் முழங்க, வாணவேடிக்கையுடன் திரளான பக்தர்கள் தா.பேட்டை நகரின் முக்கிய வீதிகள் வழியாக தீர்த்தக்குடம் எடுத்து வந்து அம்மன் நிலையில் ஊற்றினர்.
அதனை தொடர்ந்து கோவில் நிலை முன்பு கம்பு, கேழ்வரகு ஆகியவற்றால் செய்யப்பட்ட கூழ், நீர்மோர், பானகம், இளநீர் ஆகியவை படையல் இடப்பட்டது. அப்போது வீரமலையாண்டி, வண்டிதுரை, உக்ராண்டி, சடா முனி, மதுரைவீரன் உள்ளிட்ட தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகளும், வழிபாடுகளும் நடத்தப்பட்டன. சாமியாடிகள் அருள்வாக்கு கூறினர். விழாக்குழுவினர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர்.
திருச்சி அருகே உள்ள புங்கனூர் கிராமத்தில் உள்ள ஸ்ரீ அன்ன சாய்பாபா கோவிலில் 10-ம் ஆண்டு பால்குட திருவிழா நடைபெற்றது. பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து அன்ன சாய்பாபாவுக்கு அபிஷேகம் நடத்தினர். முன்னதாக காலையில் கணபதி ஹோமம் செய்யப்பட்டது. மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
முசிறி புதிய பஸ் நிலையம் அருகே உள்ள காமராஜர் காலனியில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் பால்குட விழா நடைபெற்றது. பக்தர்கள் காவிரி ஆற்றில் புனித நீராடி அம்மனுக்கு பூஜை செய்து பால்குடம் எடுத்து ஊர்வலமாக, நகரின் முக்கிய வீதிகள் வழியாக சுற்றி கோவிலை வந்தடைந்தனர். பின்னர் அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.