தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள, நவதிருப்பதி தலங்களில் 9வது தலமான ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் சித்திரை திருவிழா ஆண்டு தோறும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு விஸ்வரூபம், அதைத் தொடர்ந்து திருமஞ்சனம், தீபாராதனை, நித்தியல் கோஷ்டி நடைபெற்றது.
காலை 8.45 மணிக்கு உற்சவர் பொலிந்து நின்ற பிரான் ஸ்ரீதேவி, பூதேவி, நீளாதேவி தாயார்களுடன் கொடிமரம் முன்பு எழுந்தருளினார். உடன் நம்மாழ்வாரும் எழுந்தருளினார். தொடர்ந்து காலை 9.00 மணிக்கு கொடிபட்டம் மாட வீதிகளை சுற்றி வந்து 9.30 மணிக்கு கொடியேற்றம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
விழாவின் முக்கிய நிகழ்வுகளாக 23ஆம் தேதி கருட சேவை நிகழ்ச்சியும், 27ஆம் தேதி தேர்த்திருவிழாவும், 28ஆம் தேதி தீர்த்தவாரியும் நடைபெறுகிறது.
திருவிழா காலங்களில் தினமும் மாலை சுவாமி பொலிந்து நின்ற பிரான் பரங்கி நாற்காலி, சிம்ம வாகனம், அனுமந்த வாகனம், சேஷ வாகனம், கருட வாகனம், யானை வாகனம், இந்திர விமான வாகனம், குதிரை வாகனம், புன்னை மர வாகனம், வெட்டிவேர் சப்பரம் என தினமும் வெவ்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.