வாழப்பாடி,
சேலம் மாவட்டம், வாழப்பாடி பகுதியில் உள்ள சிவாலயங்களில் சித்திரை பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பேளூர் தான்தோன்றீஸ்வரர் கோவிலில் மகா நந்திக்கு மங்கல பொருட்களால் சிறப்பு அபிஷேகமும், மூலவர் தான்தோன்றீஸ்வரர் உடனுறை அம்மன் அறம் வளர்த்தநாயகி, தர்மசம்வர்த்தினி அம்பாளுக்கு சிறப்பு தீபாராதனையும் நடைபெற்றது. மகா நந்தி, தான்தோன்றீஸ்வரர், தர்மசம்வர்த்தினி அம்பாள் புஷ்ப அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
இதேபோல் வாழப்பாடி அக்ரஹாரம் காசி விசாலாட்சி உடனுறை காசி விஸ்வநாதர் கோவில் மற்றும் பெரியசாமி நகர் தையல்நாயகி உடனுறை வைத்தியநாதர் கோவில்களில் நடைபெற்ற சித்திரை பிரதோஷ வழிபாட்டில், நந்தீஸ்வரர், காசி விஸ்வநாதர், காசி விசாலாட்சி, வைத்தியநாதர், தையல்நாயகி அம்பாளுக்கும் அபிஷேக ஆராதனைகளுடன் சிறப்பு பூஜை நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
வாழப்பாடி அடுத்த வேப்பிலைப்பட்டி, விலாரிபாளையம் மோட்டூர் மற்றும் கல்யாணகிரி தேன்மலை சிவன் கோவில்களிலும் சித்திரை பிரதோஷ சிறப்பு பூஜை விமரிசையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.