மயிலாடுதுறை,
மயிலாடுதுறையில் சோழர் காலத்தில் கட்டப்பட்ட அறம்வளர்த்த நாயகி சமேத ஐயாறப்பர் சுவாமி கோவில் உள்ளது. திருவையாறில் நடைபெறும் சப்தஸ்தான பெருவிழாவைப் போன்று இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் சப்தஸ்தான பெருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
ஏழூர் திருவிழா எனப்படும் சித்திரை சப்தஸ்தான பெருவிழாவில் மயிலாடுதுறை மாயூரநாதர், கூறைநாடு புனுகீஸ்வரர், சித்தர்காடு பிரம்மபுரீஸ்வரர், மூவலூர் மார்க்கசகாயேஸ்வரர், சோழம்பேட்டை அழகியநாதர், திருவிழந்தூர் தான்தோன்றீஸ்வரர் ஆகிய கோவில்களில் இருந்து சுவாமி, அம்பாள் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகள் புறப்பாடாகி மாயூரநாதர் கோவிலில் ஒரே இடத்தில் சப்தஸ்தான விழா நடப்பது வழக்கமாகும்.
அவ்வகையில் நிகழாண்டு சப்தஸ்தான பெருவிழா ஏப்.22-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான ஏழூர் சுவாமிகள் எழுந்தருளும் சப்தஸ்தான பெருவிழா நடைபெற்றது. சித்தர்காடு பிரம்மபுரீஸ்வரர், மூவலூர் மார்க்கசகாயேஸ்வரர் கோவில்களில் பாலாலயம் செய்யப்பட்டுள்ளதால், மற்ற கோவில்களில் இருந்து பஞ்சமூர்த்திகள் விழாவில் எழுந்தருளினர். பின்னர், அனைத்து கோவில்களின் பஞ்சமூர்த்திகள் சமயக்குரவர்களான அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகியோருக்கு காட்சி கொடுக்கும் ஐதீக உற்சவம் நடைபெற்றது.
இதில், திருவாவடுதுறை ஆதீனம் 24-வது குருமகா சந்நிதானம் அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் கலந்துகொண்டு அனைத்து சுவாமிகளுக்கும் பட்டு அணிவித்து வழிபாடு செய்தார். பின்னர் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இந்நிகழ்வில் பக்தர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.