தென்காசி,
குற்றாலத்தில் அகஸ்தியர் அமர்ந்த மலையான பொதிகை மலையில் அமைந்துள்ள செண்பகா தேவி அம்மன் கோவிலில் சித்ரா பௌர்ணமி திருவிழா ஆண்டுதோறும் சித்திரை மாதம் நடைபெறுவது வழக்கம். அவ்வகையில் இந்த ஆண்டின் திருவிழா நேற்று முன்தினம் காலையில் அம்மனுக்கு காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. இந்நிகழ்வில் கட்டளைதாரர்கள் மற்றும் அகஸ்தியர் சத்மார்க்க சபையை சேர்ந்தவர்கள் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
விழா நாட்களில் தினமும் ஒவ்வொரு சமுதாயத்தின் சார்பில் மண்டகப்படி சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற உள்ளது. விழாவின் முக்கிய நிகழ்வாக, மே 1ஆம் தேதி சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு அம்மனுக்கு காலையில் கணபதி ஹோமம் உள்ளிட்ட பல்வேறு ஹோமங்கள், சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை, மதியம் உச்சிக்கால பூஜை மற்றும் தீபாராதனை நடைபெறுகிறது. ஏராளமான பக்தர்கள் பொங்கலிட்டு வழிபட உள்ளனர். மேலும் ஏராளமான பெண்கள் அவ்வையார் அம்மனுக்கு கொழுக்கட்டை படைத்தும் வழிபட உள்ளனர்.
இரவில் சிறப்பு அலங்கார தீபாராதனையும் நள்ளிரவில் சித்திரா பௌர்ணமி சிறப்பு வழிபாடும் நடைபெற உள்ளது. இதில் ஏராளமான பக்தர்கள் பல்வேறு பகுதிகளில் வந்து இருந்து கலந்து கொள்ள உள்ளனர். மே 2ஆம் தேதி காலை 10.30 மணிக்கு மேல் அம்மனுக்கு செண்பகாதேவி அருவியில் வைத்து மஞ்சள் தீர்த்தவாரி நடைபெற உள்ளது.