பழனி:
அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி திருவிழாவின் நிறைவாக, வள்ளி, தெய்வானை சமேத சண்முகருக்கு இன்று (நவம்பர் 16) திருக்கல்யாண வைபவம் கோலாகலமாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பழனி முருகன் கோவிலில் ஆண்டுதோறும் கந்த சஷ்டி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான கந்த சஷ்டி விழா கடந்த நவம்பர் 10-ந்தேதி காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. விழாவையொட்டி தினமும் சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரங்கள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றன.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நேற்று (நவம்பர் 15) மாலை நடைபெற்றது. இதையொட்டி, பழனி கிரிவீதிகளில் முருகப்பெருமான் சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்வு வெகு விமரிசையாக நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முருகப்பெருமானை வழிபட்டனர்.
இதனைத் தொடர்ந்து, இன்று காலை மலைக்கோயிலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் வள்ளி, தெய்வானை சமேத சண்முகருக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. காலை 9.30 மணிக்கு மேல் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் மற்றும் பூஜைகள் செய்யப்பட்டன.
தொடர்ந்து, வேத மந்திரங்கள் முழங்க திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது அங்கு திரண்டிருந்த பக்தர்கள் 'அரோகரா... அரோகரா...' என பக்தி முழக்கமிட்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டதால் கோவில் வளாகம் பக்தர்கள் கூட்டத்தால் களைகட்டியது.
கந்த சஷ்டி விழாவையொட்டி கடந்த 6 நாட்களாக ஆயிரக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபட்டு வந்தனர். இன்று நடைபெற்ற திருக்கல்யாண வைபவத்தை தரிசனம் செய்த பின்னர் பக்தர்கள் தங்களது கந்த சஷ்டி விரதத்தை நிறைவு செய்தனர்.