உவரியில் நடைபெற்ற பரிவேட்டை நிகழ்ச்சி 
ஆன்மிகம்

கோவில்களில் பரிவேட்டை நிகழ்ச்சியுடன் நவராத்திரி விழா நிறைவு

உவரி கடற்கரையில் நடைபெற்ற பரிவேட்டை நிகழ்ச்சியில், அஸ்திரங்கள் வன்னி மரத்தில் எய்தப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.

நெல்லை,

நெல்லையில் நவராத்திரி விழா நிறைவையொட்டி கோவில்களில் பரிவேட்டை நிகழ்ச்சி நடைபெற்றது.

நெல்லை டவுன் சுவாமி நெல்லையப்பர், காந்திமதி அம்மன் கோவிலில் சோமவார மண்டபத்தில் நவராத்திரி திருவிழா கடந்த 11-ந்தேதி தொடங்கி விமரிசையாக நடைபெற்றது. இதையொட்டி கோவிலில் அம்மன் கொலு வீற்றிருக்கும் வைபவம் நடந்தது. இதில் தினமும் ஒரு அலங்காரத்தில் அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

10-வது நாளான நேற்று காலை சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு வழிபாடு, அலங்கார தீபாராதனை நடந்தது.

பின்னர் சுவாமி சந்திரசேகரர் குதிரை வாகனத்தில் பரிவேட்டைக்கு எழுந்தருளி, ராமையன்பட்டிக்கு புறப்பட்டார். மாலையில் சுவாமி சந்திரசேகரர் குதிரை வாகனத்தில் அமர்ந்து ராமையன்பட்டிக்கு சென்று பரிவேட்டையில் அம்பு எய்தினார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

ராஜகோபால சுவாமி

இதே போல் பாளையங்கோட்டை அழகிய மன்னார் ராஜகோபாலசாமி கோவிலில் விஜயதசமியையொட்டி ராஜகோபால சுவாமி குதிரை வாகனத்தில் எழுந்தருளி வி.எம்.சத்திரம் விஸ்வகர்மா கண்ணார் மண்டபம் சென்றார். அங்கு சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. இதன் பின்னர் ராஜகோபாலசுவாமி குதிரை வாகனத்தில் எழுந்தருளி பரிவேட்டையில் அம்புகள் எய்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. வருண பகவானிடம் மழை வேண்டி அம்பு எய்தப்பட்டது. இந்நிகழ்வில் பாளையங்கோட்டை நகர விஸ்வகர்ம சமுதாய மக்கள், கட்டளை நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

உவரி கடற்கரையில் பரிவேட்டை

உவரி சுயம்புலிங்க சுவாமி கோவிலில் பரிவேட்டை நிகழ்ச்சி நேற்று மாலை நடந்தது. சுவாமி சந்திரசேகரர் வில், அம்புடன் வெள்ளி குதிரை வாகனத்தில் மேளதாளம் முழங்க சுயம்புலிங்க சுவாமி கோவிலில் இருந்து கடற்கரைக்கு ஊர்வலமாக புறப்பட்டார். கடற்கரையில் வன்னி மரத்தடியில் அஸ்திரங்களை வைத்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது. பின்பு அஸ்திரங்கள் வன்னி மரத்தில் எய்தப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. அப்போது பக்தர்கள் வன்னி மர இலையை போட்டி போட்டு பக்தியுடன் எடுத்து சென்றனர்.

சுவாமி அங்கு சிறிது நேரம் இளைப்பாறிய பின்பு வெள்ளி குதிரை வாகனத்தில் தவனை மடம் நோக்கி வந்தார். அவரை வெள்ளி ரிஷப வாகனத்தில் வந்த மனோன்மணி அம்பிகை எதிர்கொண்டு தவனை மடத்திற்கு அழைத்து சென்றார். அங்கு சுவாமிக்கு பானகம் வழங்கப்பட்டது. பின்னர் சுவாமி சந்திரசேகரர் -மனோன்மணி அம்பிகை தம்பதி சகிதமாய் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து கோவிலை அடைந்தனர். விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

SCROLL FOR NEXT