கோபி,
ஈரோடு மாவட்டம் கோபி வண்டிபேட்டையில் சுமார் 75 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ ஏரி மாரியம்மன் கோயில், விநாயகர், துர்க்கை, கருப்பராயன், கன்னிமார் கோயில் உள்ளது. இந்த கோயிலில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை குடமுழுக்கு விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு குடமுழுக்கு விழா நடைபெற வேண்டிய நிலையில் கோயில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று முடிவுற்றது.
அதைத்தொடர்ந்து கடந்த 8ம் தேதி முகூர்த்தகால் நடுதலுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. 13ம் தேதி முளைப்பாலிகை இடுதல், 15ம் தேதி விநாயகர் பூஜை, நவகிரஹ யாகம் மற்றும் கணபதி யாகமும் பின்னர் பவானி கூடுதுறை ஆற்றில் இருந்து தீர்த்தம் கொண்டு வரப்பட்டது.
17ம் தேதி முளைப்பாலிகை கோயிலுக்கு கொண்டு வருதல், வாஸ்து சாந்தி, காப்பு கட்டுதல், முதல்கால யாக பூஜையும், 18ம் தேதி பூத சுத்தி, பாவனாபிஷேகம், மூர்த்தி கும்ப பூஜை, இரண்டாம் கால யாக பூஜையும், மாலையில் மூல மந்திர ஹோமத்தை தொடர்ந்து மூன்றாம் கால யாக மூஜையும் நடைபெற்றது.
நேற்று (19ம் தேதி) காலையில் விநாயகர் பூஜை, அஷ்டபந்தனம் சாற்றுதல், கோபுர கலசம் வைத்தல், நான்காம் கால யாக பூஜை, மாலையில் தாமரை மலர்களால் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாம அர்ச்சனையை தொடர்ந்து 5ம் கால யாக பூஜை மற்றும் ஸ்ரீ ஏரி மாரியம்மனுக்கு ரஜபந்தனம் சாற்றுதல் நடைபெற்றது.
இன்று (20ந்தேதி) காலை நாடி சந்தானம், சக்திகளை திருமேனியில் சேர்த்தலை தொடர்ந்து புனித நீர் உள்ள கலசங்களை சிவாச்சாரியார்கள் சுமந்து கோயிலை வலம் வந்து ஸ்ரீ ஏரி மாரியம்மன், விநாயகர், துர்க்கை, கருப்பராயன், கன்னிமார் கோயில் கோபுரங்களை அடைந்தனர். பின்னர் கோபுர கலசங்களுக்கு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர்.
அதைத்தொடர்ந்து மகா அபிஷேகமும் தீபாராதனையும் நடைபெற்றது. பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. கோயில் குடமுழுக்கு விழாவில் கோபி, வண்டிபேட்டை, மார்க்கெட், கச்சேரிமேடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.