கும்பாபிஷேகம் 
ஆன்மிகம்

அறந்தாங்கி அருகே ஸ்ரீதனிச்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

கும்பாபிஷேக விழாவில் தேடாக்கி மற்றும் அப்பகுதியை சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

புதுக்கோட்டை,

அறந்தாங்கி அருகே தேடாக்கி கிராமத்தில் ஸ்ரீதனிச்சியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தாலுகா தேடாக்கி எல்லையில் அமைந்துள்ளது தனிச்சியம்மன் ஆலயம். இக்கோவிலில் திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் நடத்த கிராம மக்களால் முடிவு செய்யப்பட்டது. அதன்படி திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. திருப்பணி வேலைகள் முடிந்ததையடுத்து நேற்று முன்தினம் (19.6.2026) கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது.

3 நாட்களாக யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. யாகசாலை பூஜையின் நிறைவாக இன்று காலையில், கடம் புறப்பாடு நடைபெற்றது. பல்வேறு பகுதிகளிலிருந்து கொண்டு வரப்பெற்று பூஜிக்கப்பட்ட புனித நீர் அடங்கிய கலசங்களை கோவிலை சுற்றி ஊர்வலமாக கொண்டு சென்றனர்.

இந்த கலசங்கள் கோபுர உச்சியை அடைந்ததும், சிவாச்சாரியார் சாமிநாத குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, கோபுர கலசங்களுக்கு புனித நீரை ஊற்றி மஹா கும்பாபிஷேகம் செய்தனர். அதைத் தொடர்ந்து ஸ்ரீ மகா கணபதி, ஸ்ரீ தனிச்சியம்மன், ஸ்ரீ கௌமாரி, ஸ்ரீ மாகேஸ்வரி, ஸ்ரீ பிராம்ஹி, ஸ்ரீ வைஷ்ணவி, ஸ்ரீ வாராகி, ஸ்ரீ இந்திராணி மற்றும் வீரபத்திரர் சன்னதிகளில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

கும்பாபிஷேக விழாவில் தேடாக்கி மற்றும் அப்பகுதியை சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. நாகுடி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.