மாதா சொரூபத்திற்கு தங்க கிரீடம் அணிவிக்கப்பட்ட டகாட்சி 
ஆன்மிகம்

வேளாங்கண்ணி மாதாவுக்கு தங்க கிரீடத்தால் முடிசூட்டும் விழா: ஏராளமானோர் பங்கேற்பு

அலங்கரிக்கப்பட்ட தேரில் இருந்த மாதாவின் சொரூபத்திற்கு தஞ்சை மறை மாவட்ட ஆயர் சகாயராஜ் தங்க கிரீடத்தை சூட்டினார்.

வேளாங்கண்ணி, மே.31-

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா பேராலயம் அமைந்துள்ளது. இந்த பேராலயத்திற்கு வெளிநாடு, வெளி மாநிலங்கள், வெளியூர்களில் இருந்து ஏராளமானோர் வந்து செல்கின்றனர். மேலும் இது சுற்றுலா தலமாகவும் விளங்குகிறது. இந்த ஆலயம் கீழை நாடுகளின் 'லூர்து நகர்' என அழைக்கப்படுகிறது.

உலக புகழ்பெற்ற இந்த பேராலயத்தில் உள்ள ஆரோக்கிய மாதாவுக்கு மே மாதம் உகந்த மாதமாக கிறிஸ்தவர்களால் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதனை முன்னிட்டு கடந்த 6-ந் தேதி முதல் திருப்பலி, தேர்பவனி மற்றும் திவ்ய நற்கருணை ஆசீர் ஆகியவை நடந்து வருகிறது.

தேர் பவனி

இதைத் தொடர்ந்து முக்கிய நிகழ்ச்சியான ஆரோக்கிய மாதாவுக்கு முடிசூட்டும் விழா நேற்று நடந்தது. முன்னதாக தஞ்சை மறை மாவட்ட ஆயர் சகாயராஜ் தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது.

பின்னர் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் இருந்த மாதாவின் சொரூபத்திற்கு தஞ்சை மறை மாவட்ட ஆயர் சகாயராஜ் தங்க கிரீடத்தை சூட்டினார். அதனைத்தொடர்ந்து திவ்ய நற்கருணை ஆசீர் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது. பின்னர் சிலுவை பாதையில் தேர்பவனி நடந்தது.

பிரார்த்தனை

அப்போது இருபுறமும் ஏராளமானோர் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி பிரார்த்தனை செய்தனர். தேர்பவனி பேராலய கலையரங்கத்தை வந்தடைந்தது.

இதில் பேராலய அதிபர் இருதயராஜ் மற்றும் பங்குதந்தையர்கள், நிர்வாக தந்தையர்கள், அருள் சகோதரர்கள், அருள்சகோதரிகள் கலந்து கொண்ட னர். விழாவில் தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்துகொண்டனர்.