கடலூர்,
கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே பூதவராயன்பேட்டை கிராமத்தில் திரௌபதி அம்மன் ஆலயத்தில், ஆனி மாத தீமிதி திருவிழா விமரிசையாக நடைபெற்றது.
இவ்விழாவானது கடந்த சில நாட்களுக்கு முன்பு காப்பு கட்டுதல் மற்றும் கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் அம்மனுக்கு நாள்தோறும் சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், விசேஷ பூஜைகளும் தொடர்ந்து நடைபெற்று வந்தன.
முக்கிய நிகழ்வான தீமிதி உற்சவம் நேற்று மாலை நடைபெற்றது. இந்நிகழ்வை முன்னிட்டு வெள்ளாற்று நதியிலிருந்து விசேஷமாக அலங்கரிக்கப்பட்ட பூங்கரகம் புறப்பட்டது. காப்பு கட்டிய நூற்றுக்கணக்கான பக்தர்கள், அம்மனை போற்றி பக்தி முழக்கம் எழுப்பியவாறு, பூங்கரகத்துடன் கிராமத்தின் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக வந்தனர்.
இந்த ஊர்வலம் கோவில் வளாகத்தை வந்தடைந்ததும், கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் காப்பு கட்டிய பக்தர்கள் ஒவ்வொருவராக இறங்கி, தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
தீமிதி திருவிழாவில் பூதவராயன்பேட்டை மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.