ஆன்மிகம்

2027-ம் ஆண்டு பிப்ரவரியில் திருப்பதி ஏழுமலையானை வழிபட தரிசன டிக்கெட்டுகள் வெளியீடு

24-ந்தேதி திருமலை மற்றும் திருப்பதியில் தங்குவதற்கான விடுதி அறைகள் விவரம் ஒதுக்கீடுகளும் வெளியிடப்படும்.

திருப்பதி,

2027-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் திருப்பதி ஏழுமலையானை பக்தர்கள் வழிபட பல்வேறு தரிசன டிக்கெட்டுகள் வெளியிடப்படுகின்றன.

திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஆர்ஜித சேவைகள்

திருப்பதி ஏழுமலையானை 2027-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் பக்தர்கள் தரிசிக்க பல்வேறு தரிசன டிக்கெட்டுகள், ஆர்ஜித சேவைகள் மற்றும் தங்கும் விடுதிகளுக்கான ஒதுக்கீடுகளை இணையதளத்தில் தேவஸ்தானம் வெளியிட உள்ளது. அதில் சுப்ரபாதம், தோமாலை, அர்ச்சனை மற்றும் அஷ்டதள பாத பத்மாராதனை ஆகிய ஆர்ஜித சேவைகளுக்கான டிக்கெட்டுகள் வருகிற 18-ந்தேதி காலை 10 மணிக்கு இணையத ளத்தில் வெளியிடப்படும்.

பக்தர்கள் எலக்ட்ரானிக் குலுக்கல் முறைக்கு வருகிற 20-ந்தேதி காலை 10 மணி வரை இணைய தளத்தில் பதிவு செய்யலாம். எலக்ட்ரானிக் குலுக்கல் முறையில் டிக்கெட் ஒதுக்கீடு பெற்றவர்கள் வருகிற 20 முதல் 22-ந்தேதி மதியம் 12 மணிக்குள் கட்டணத்தை செலுத்தி தங்கள் டிக்கெட்டுகளை உறுதிப்படுத்தி கொள்ள வேண்டும்.

ரூ.300 டிக்கெட்டுகள்

மேலும் ஆர்ஜித சேவைகளான கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம் மற்றும் சகஸ்ர தீப அலங்கார சேவை டிக்கெட்டுகள் 21-ந்தேதி காலை 10 மணிக்கு இணையதளத்தில் வெளியிடப்படும். அத்துடன் மெய்நிகர் சேவைகள் மற்றும் அவற்றுடன் சம்பந்தப்பட்ட தரிசன டிக்கெட்டுகள் ஒதுக்கீடு அன்று மாலை 3 மணிக்கு வெளியிடப்படும்.

அங்கப்பிரதட்சண டோக்கன்களுக்கான ஒதுக்கீடு 23-ந்தேதி காலை 10 மணிக்கும், ஸ்ரீவாணி அறக்கட்டளை தரிசன டிக்கெட்டுகளுக்கான ஒதுக்கீடு காலை 11 மணிக்கும் வெளியிடப்படும். முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தரிசன டிக்கெட்டுகள் ஒதுக்கீடு அன்று மாலை 3 மணிக்கு வெளியிடப்படும். சிறப்பு நுழைவு தரிசனமான ரூ.300 டிக்கெட்டுகள் 24-ந்தேதி காலை 10 மணிக்கு இணையதளத்தில் வெளியிடப்படும்.

அறைகள் ஒதுக்கீடு

24-ந்தேதி மாலை 3 மணிக்கு திருமலை மற்றும் திருப்பதியில் தங்குவதற்கான விடுதி அறைகள் விவரம் ஒதுக்கீடுகளும் வெளியிடப்படும். பக்தர்கள் ஸ்ரீவாரி ஆர்ஜித சேவைகள் மற்றும் தரிசன டிக்கெட்டுகளை தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ https://ttdevasthanams.ap.gov.in என்ற முகவரியின் வாயிலாக மட்டுமே முன்பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT