கோவில்கள் மற்றும் வீடுகளில் ஏற்றப்படும் ஒவ்வொரு தீபத்திற்கும் ஒரு அர்த்தம் இருக்கிறது. ஆனால் சில தீபங்கள் வெறும் ஒளி அல்ல, அவை ஒரு சக்தி, ஒரு தீர்வு, ஒரு தெய்வீக பதிலாக விளங்குகிறது. அப்படிப்பட்ட அற்புதமான தீபங்களில் ஒன்று எலுமிச்சை விளக்கு.
எலுமிச்சை விளக்கை சரியான முறையில் ஏற்றுவது அவசியம். எலுமிச்சையை இரண்டாக நறுக்கவேண்டும், சாறை பிழிந்து விடவேண்டும். பின்னர் தோலை உள்ளே திருப்பி கிண்ணம் போல மாற்றி, அதில் நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி திரி வைத்து தீபம் ஏற்ற வேண்டும். எலுமிச்சை தீபத்தை எப்போதும் ஜோடியாக ஏற்ற வேண்டும். ஒற்றை தீபம் ஏற்றக் கூடாது. எலுமிச்சை தீபத்தை கோவில்களில் மட்டுமே ஏற்றுவது சிறப்பு. வீட்டில் தவிர்ப்பது மரபு. பொதுவாக ராகு காலத்தில் எலுமிச்சை தீபம் ஏற்றி வழிபாடு செய்து வந்தால் தீராத நோய்களும் தீரும் என்பது ஐதீகம்.
துர்கை அம்மன் முன் எலுமிச்சை தீபம் ஏற்றி 9 முறை அல்லது 21 முறை வலம் வந்து வணங்கவேண்டும். 2 எலுமிச்சை தீபம் ஏற்றி துர்கையை வழிபட்டால் நினைத்தது நிச்சயம் நடக்கும் என்று நம்பப்படுகிறது.
ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் (மாலை 4.30 மணிக்கு மேல் 6.00 மணிக்குள்) தீபம் ஏற்றினால் தீராத நோய்கள் குணமாகும், உடல், மன ஆரோக்கியம் மேம்படும்.
மேலும், பைரவர் சன்னதியில் ஏற்றினால், எதிரி பயம் நீங்கும், நீண்ட நாள் கஷ்டங்கள் தீரும்.
செவ்வாய்க்கிழமை மாலை 3.00 மணிக்கு மேல் 4.30 மணிக்குள் (ராகு காலம்) தீபம் ஏற்றினால் கணவன்-மனைவி பிரச்சனைகள் சரியாகும், குடும்ப அமைதி கிடைக்கும், ராகு தோஷம், செவ்வாய் தோஷம் நீங்கும், கடன் பிரச்சனை, வழக்கு பிரச்சனைகள் குறையும் என்பது நம்பிக்கை.
வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் எலுமிச்சை தீபம் ஏற்றி வழிபட, திருமண தடை நீங்கும், வேலையில்லாதவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும், செல்வ வளம் பெருகும், நினைத்த காரியங்கள் நிறைவேறும் என்பது நம்பிக்கை.