ஆடி மாதத்தில் வரும் மிகச் சிறப்பான நாளான ஆடிப்பெருக்கு இன்று கொண்டாடப்படுகிறது. விவசாயம் செழிப்பதற்கு தேவையான தண்ணீரை வழங்கும் நதிகள் மற்றும் நீர்நிலைகளை போற்றி வணங்கும் வகையில் சிறப்பு பூஜை செய்யப்படுகிறது. குறிப்பாக காவிரிக் கரையோர மாவட்டங்களில் ஆடிப்பெருக்கு விழா சிறப்பாக நடக்கிறது.
இந்த ஆண்டு காவிரியில் தண்ணீர் வராத நிலையில், ஆங்காங்கு தேங்கி கிடக்கும் தண்ணீரில் புதுமண தம்பதியர் மற்றம் பொதுமக்கள் நீராடி, ஆற்றங்கரைகளில் காவிரி தாய்க்கு பூஜை செய்து வழிபட்டனர். பின்னர் மஞ்சள் , குங்குமம், மலர், வஸ்திரம் சமர்ப்பித்தனர். புதுப்பெண்கள் தாலியில் உள்ள மஞ்சள் கயிற்றை நீக்கிவிட்டு, புதிய மஞ்சள் கயிற்றில் தாலியை மாற்றி, தன்னுடைய கணவனின் கையால் கட்டிக்கொண்டனர். இதன் மூலம் தன்னுடைய மாங்கல்ய பலம் நீடிக்கும், நிலைக்கும் என்பது நம்பிக்கை.
நதிக்கரையோரம் இவ்வாறு ஆடிப்பெருக்கு பூஜை செய்யக்கூடிய வாய்ப்பு எல்லோருக்கும் கிடைக்காது. அவர்கள், “நம் ஊரில்தான் ஆறு, நதிகள் இல்லையே, பிறகு எப்படி இந்த விழாவைக் கொண்டாடுவது?” என்று பூஜை செய்வதை விட்டுவிடும் வழக்கமும் உள்ளது. ஆனால் ஆடிப்பெருக்கை கொண்டாட நதிக்கரையோரம் தான் இருக்கவேண்டும் என்று என்பதில்லை. நதிக்கரையில்தான் அந்த வழிபாட்டை செய்ய வேண்டும் என்பதும் இல்லை.
நதிக்கரையோரத்தில் இல்லாத மக்கள், ஆடிப்பெருக்கு பூஜையை வீட்டிலேயே எளிய முறையில் செய்யலாம். நிறைகுடத்தில் இருந்து ஒரு செம்பு நிறைய தண்ணீர் எடுத்து, அதில் அரைத்த மஞ்சளை சேர்க்கவேண்டும். இப்போது வழிபாட்டுக்கான தீர்த்தம் தயார். பின்னர் வீட்டில் விளக்கேற்றி, அந்த தீர்த்த சொம்பை விளக்கின் முன்பாக வைக்க வேண்டும். தண்ணீரில் உதிரிப் பூக்களைப் போட வேண்டும். கற்பூர ஆரத்தி அல்லது நெய்தீபம் காட்டி, புண்ணிய தீர்த்தங்களான கங்கை , யமுனை, நர்மதை , காவிரி, வைகை, தாமிரபரணி போன்ற நதிகளை மனதில் நினைத்து வழிபடவேண்டும். பூஜை முடிந்ததும் செம்பிலுள்ள நீரை, வீட்டில் உள்ள செடி, கொடிகளுக்கு ஊற்றி விட வேண்டும்.
அட்சய திருதியை தினத்தில் மங்கலப் பொருட்கள் வாங்குவது நல்லது என்ற கருத்து உள்ளது. ஆனால் அட்சய திருதியை தினத்தை விட, சிறப்பான நாளாக ஆடிப்பெருக்கு உள்ளது. இந்த நாளில் தங்க நகை மட்டுமல்லாது, மங்கலம் நிறைந்த எந்தப் பொருட்களாக இருந்தாலும் வாங்கலாம். இதனால் வீட்டில் சுபிட்சம் உண்டாகும், இந்நாளில் தொடங்கும் சேமிப்பும், பல மடங்காய் பெருகும் என்பது நம்பிக்கை. ஆடி மாதத்தில் பொதுவாக புதுத்தொழில் தொடங்குவதில்லை. ஆனால், அதற்கு ஆடிப்பெருக்கு தினம் மட்டும் விதிவிலக்காக இருக்கிறது. இந்த நாளில் தொடங்கும் எந்த ஒரு புதிய விஷயமும் பன்மடங்கு பலனைத்தரும்.