மணப்பாறை,
திருச்சி மாவட்டம் மணப்பாறை நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற வேப்பிலை மாரியம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும். இதேபோல் இந்த ஆண்டும் சித்திரை திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது.
சித்திரை மாத முதல் நாளன்று உலக நன்மைக்காக குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது. கடந்த மாதம் 26-ந் தேதி பூச்சொரிதல் விழா நடைபெற்றது. கடந்த 3-ந் தேதி காப்பு கட்டுதலுடன் திருவிழா தொடங்கியது. இதைத் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் மண்டகப்படி நிகழ்ச்சிகளும், அம்மன் திரு வீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெற்று வருகின்றன.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக பால்குட விழா நேற்று காலை நடைபெற்றது. விழாவை முன்னிட்டு நேற்று காலை 6 மணிக்கு பச்சை மூங்கில் மர கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோவிலில் இருந்து தாரை, தப்பட்டை முழங்க கோவிலின் பரம்பரை அறங்காவலர் ஆர்.வீ.எஸ்.வீரமணி தலைமையில் பால்குட ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலம் ராஜவீதிகளின் வழியாக சென்று வேப்பிலை மாரியம்மன் கோவிலை வந்தடைந்தது. அங்கு அம்மனுக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது.
பால்குட விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று பால்குடம் எடுத்து வந்தனர்.