டேராடூன்,
கேதார்நாத் யாத்திரை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், கடும் பனிப்பொழிவுக்கு மத்தியிலும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து இறைவனை தரிசனம் செய்கின்றனர்.
உத்தரகாண்ட் மாநிலத்தில், இமய மலைத்தொடரில் அமைந்துள்ளது கேதார்நாத் கோவில். 12 ஜோதிர்லிங்க தலங்களில் ஒன்றான இக்கோவில், சிவ பக்தர்களின் சார்தாம் யாத்திரையின் முக்கிய தலமாக விளங்குகிறது. குளிர்காலத்தில் இப்பகுதி முழுவதும் மிகக் கடுமையான பனிப்பொழிவுடன் உறைபனி நிலவும் என்பதால், ஆண்டுக்கு 6 மாதங்கள் மட்டுமே கோவில் நடை திறந்திருக்கும். இந்த காலகட்டத்தில் பக்தர்கள் இங்கு வந்து தரிசனம் செய்யலாம்.
அவ்வகையில் இந்த ஆண்டு ஏப்ரல் 22-ம் தேதி கோவில் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். அன்று முதல் ஏராளமான பக்தர்கள் யாத்திரையாக சென்று கேதார்நாதரை தரிசனம் செய்துவருகின்றனர்.
இந்த யாத்திரை சீசன் முடியும் தருவாயில், கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் கடுமையான பனிப்பொழிவு இருப்பதால் கோவில் உள்ள பகுதி முழுவதும் வெண்போர்வை போர்த்தியதுபோல் காட்சியளிக்கிறது. கடும் குளிரையும் பொருட்படுத்தாமல், பக்தர்கள் சாரை சாரையாக சென்று கேதார்நாதரைத் தரிசிக்கின்றனர். மலைப்பாதை வழியாக நடைபயணமாக சென்றும், குதிரை, கோவேறு கழுதைகளில் சென்றும், பல்லக்கு, ஹெலிகாப்டர் மூலமாகவும் பக்தர்கள் கேதார்நாத் தலத்தை அடைகின்றனர்.
2026ம் ஆண்டுக்கான கேதார்நாத் யாத்திரை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதுவரை 18,80,398 பக்தர்கள் கேதார்நாதரைத் தரிசனம் செய்துள்ளனர். வரும் 11ம் தேதி குளிர்காலத்தை முன்னிட்டு கோவில் நடை மூடப்பட உள்ளது. இன்னும் 8 நாட்களே யாத்திரை நடைபெற உள்ள நிலையில், பக்தர்களின் வருகை அதிகரித்து வருகிறது.
குளிர் அதிகரித்து வருவதால் பக்தர்களுக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் உடல்நலனுக்கு முன்னுரிமை அளித்து மாவட்ட நிர்வாகம் தேவையான ஏற்பாடுகளைச் செய்து வருகிறது. தங்குமிடம், உணவு, குடிநீர் மற்றும் மருத்துவ வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ருத்ரபிரயாக் காவல்துறையினரும் உள்ளூர் நிர்வாகத்துடன் இணைந்து பாதுகாப்புப் பணிகள், கூட்ட நெரிசல் கட்டுப்பாடு மற்றும் யாத்திரை சீராக நடைபெறுவதைக் கண்காணித்து வருகின்றனர்.
கேதார்நாத் பகுதியில் கடும் குளிரும் பனிப்பொழிவும் நிலவி வருவதால், யாத்திரை செல்லும் பக்தர்கள் போதுமான குளிர்கால ஆடைகளை எடுத்துச்செல்ல வேண்டும் என காவல்துறை அறிவுறுத்தி உள்ளது. வானிலை நிலவரத்தைக் கருத்தில் கொண்டு பயணத்தைத் திட்டமிடுவதுடன், காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் வெளியிடும் பாதுகாப்பு வழிகாட்டுதல்களையும் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த யாத்திரை காலம் நிறைவு பெற்றதும், கோவிலில் உள்ள பகவான் கேதார் நாதரின் சிலை, பல்லக்கு மூலம் குளிர்கால வழிபாட்டிற்காக உகிமத்தில் உள்ள ஓம்காரேஷ்வர் கோவிலுக்குக் கொண்டு செல்லப்படும். அங்கு சுமார் 6 மாத காலம் உகிமத் கோவிலில் வைத்து வழிபாடு நடைபெறும். பின்னர், கேதார்நாத் கோவில் நடை திறக்கப்படும் அட்சய திரிதியை காலத்தில் (ஏப்ரல்–மே மாதம்), கேதார்நாதர் சிலை மீண்டும் அங்கு கொண்டு வரப்படும்.
இதுபற்றி ருத்ரபிரயாக் மாவட்ட கலெக்டர் கூறுகையில், ‘குளிர்காலத்தில், கேதார்நாத் கோவிலின் பல்லக்கு உகிமத்தில் உள்ள ஓம்காரேஷ்வர் கோயிலுக்குக் கொண்டுவரப்படுகிறது. அதைத் தொடர்ந்து, பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக அங்கு வரத் தொடங்குவார்கள். கடந்த பல ஆண்டுகளாக, பக்தர்களிடையே குளிர்கால யாத்திரையின் மீதான ஆர்வம் கணிசமாக அதிகரித்திருக்கிறது. பக்தர்கள் இக்கோவிலுக்கு சென்று கேதார்நாதரை வழிபடுகிறார்கள்’ என்றார்.
குளிர்கால யாத்திரையின் போது வருகை தரும் பக்தர்கள், எவ்வித சிரமத்திற்கும் உள்ளாகாமல் இருப்பதை உறுதி செய்யும் வகையில், உகிமத்தில் யாத்ரீகர்களின் வசதிக்காகவும், அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், அத்தியாவசிய சேவைகளை வழங்கவும் உரிய ஏற்பாடுகளைச் செய்யுமாறு மாவட்ட நிர்வாகம் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு உத்தரவிட்டுள்ளது.