ஆன்மிகம்

தொடர் விடுமுறையால் பழனி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்; 2 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்

அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர்.

பழனி,

அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர். விடுமுறை, விசேஷ நாட்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்கின்றனர். எனவே விடுமுறை, விசேஷ நாட்களில் பக்தர்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக இருக்கும்.

தொடர் விடுமுறை தினம்

அந்தவகையில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் ஞாயிற்றுக்கிழமை வரை தொடர் விடுமுறை தினம் என்பதால் பழனி முருகன் கோவிலில் தரிசனம் செய்ய பக்தர்கள் குவிந்தனர். காலை முதலே திரளான பக்தர்கள் படிப்பாதை, யானைப்பாதை வழியாக மலைக்கோவில் சென்று முருகப்பெருமானை தரிசனம் செய்தனர். அதேபோல் ரோப்கார், மின்இழுவை ரெயில் வழியாகவும் பக்தர்கள் செல்ல குவிந்ததால் அங்கும் கூட்டம் அதிகமாக இருந்தது.

2 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்

கோவிலில் உள்ள பொது தரிசன பாதை, கட்டண தரிசன பாதைகளில் சென்று தரிசனம் செய்ய நீண்ட வரிசை காணப்பட்டது. எனவே சுமார் 2 மணி நேரம் காத்திருந்தே சன்னதிக்கு சென்று முருகனை தரிசனம் செய்தனர்.