திருச்செந்தூர்,
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.
ஆன்மிகரீதியாக குரு தலமாகவும், செவ்வாய் தலமாகவும் போற்றப்படுவதால் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் திருச்செந்தூர் கோவிலுக்கு வரும் பக்தர்களின் கூட்டம் மேலும் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் விடுமுறை தினமான இன்று கோவிலில் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, விஸ்வரூப தீபாராதனை, உதயமார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை நடந்தது. தொடர்ந்து மற்ற கால பூஜைகள் வழக்கம்போல் நடைபெற்றன. கோடை விடுமுறை மற்றும் வார விடுமுறையான இன்று கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
பக்தர்கள் அதிகாலை முதலே கடற்கரை மற்றும் நாழிக்கிணறில் புனித நீராடி இலவச தரிசனம், ரூ.100 கட்டண தரிசனத்தில் நின்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். சாமி தரிசனம் செய்ய சுமார் 4 மணி நேரம் ஆகிறது என பக்தர்கள் தெரிவித்துள்ளனர். பக்தர்கள் குவிந்ததால் கோவில் வாகன நிறுத்துமிடங்களிலும், திருச்செந்தூர்-தூத்துக்குடி, நெல்லை சாலையோரங்களிலும் ஏராளமான வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.