திருவண்ணாமலை,
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு 2,668 அடி உயர மலை உச்சியில் நாளை (செவ்வாய்க்கிழமை) மகாதீபம் ஏற்றப்படுகிறது. இதையொட்டி ஏராளமான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை தந்துள்ளனர்.
திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் இக்கோவிலில் நடைபெறும் விழாக்களில் கார்த்திகை மாதத்தில் நடைபெறும் தீபத் திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். அவ்வகையில் இந்த ஆண்டிற்கான கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 15-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் தினமும் காலையில் விநாயகர், அம்பாளுடன் சந்திரசேகரரும், இரவில் பஞ்சமூர்த்திகளான விநாயகர், வள்ளி தெய்வானையுடன் முருகர், உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன். சண்டிகேஸ்வரர் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகா தீபம் நாளை (செவ்வாய்க்கிழமை) மாலை 6 மணியளவில் கோவில் பின்புறம் உள்ள 2,668 அடி உயர மலை உச்சியில் ஏற்றப்படுகிறது. இதற்கான தீபக் கொப்பரை இன்று மலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. தீபத் திருவிழாவை முன்னிட்டு கோவில் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
திருமாலுக்கும், பிரம்மாவுக்கும் இடையே ஏற்பட்ட 'தான்' என்ற அகந்தையை போக்க சிவபெருமான் திருவண்ணாமலையில் அடிமுடி காண முடியாத அக்னி பிழம்பாக காட்சியளித்ததாக ஐதீகம். அந்த நாளே கார்த்திகை தீபத் திருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள அண்ணாமலையார் மலை என்று அழைக்கப்படும் 2,668 அடி உயர மலையே சிவனாக வணங்கப்பட்டு வருகிறது. சிவபெருமான் அக்னி பிழம்பாக காட்சி கொடுத்ததால் அதனை போற்றும் வகையில் கார்த்திகை தீபத்தன்று இந்த மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படுகிறது.
பவுர்ணமி மற்றும் மகா தீபத்தன்று பல லட்சம் பக்தர்கள் இந்த மலையை சுற்றி 14 கிலோ மீட்டர் தூரம் கிரிவலம் செல்வார்கள். இந்த ஆண்டு மகா தீபத்தன்று 50 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாளை மகா தீபம் ஏற்றப்படுவதை முன்னிட்டு அதிகாலையிலேயே கோவில் நடை திறக்கப்பட்டு பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெறும். தொடர்ந்து அதிகாலை 4 மணியளவில் சாமி சன்னதியில் உள்ள அர்த்த மண்டபத்தில் பரணிதீபம் ஏற்றப்படும். மாலையில் பஞ்சமூர்த்திகள் சாமி சன்னதி முன்பாக உள்ள தீப தரிசன மண்டபத்தில் எழுந்தருள்வார்கள். அதைத்தொடர்ந்து 6 மணிக்கு ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே காட்சி தரும் அர்த்தநாரீஸ்வரர், சாமி சன்னதியில் இருந்து ஆடியபடியே வந்து ஒரு சில நிமிடங்கள் மட்டுமே பக்தர்களுக்கு காட்சி தருவார்.
அர்த்தநாரீஸ்வரர் காட்சி தந்ததும் சரியாக மாலை 6 மணிக்கு சாமி சன்னதி முன்பு அகண்ட தீபம் ஏற்றப்படும். அதேநேரத்தில் மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படும். அப்போது கோவிலில் கூடியிருக்கும் பக்தர்கள் 'அண்ணாமலையாருக்கு அரோகரா' என்ற பக்தி கோஷத்துடன் சாமி தரிசனம் செய்வார்கள். மகாதீபத்தை முன்னிட்டு காலை முதலே பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள். மகா தீபம் ஏற்றியதும் கிரிவலப்பாதையில் இருக்கும் பக்தர்கள் மலையை நோக்கி மகாதீபத்தை வணங்குவார்கள்.
மகாதீபம் ஏற்றப்படும் நாளில் திருவண்ணாமலை மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் மலையில் மகா தீபம் ஏற்றும் வரை தங்கள் வீடுகளிலோ, கடைகளிலோ, வியாபார நிறுவனங்களிலோ மின்விளக்குகளை ஆன் செய்யமாட்டார்கள். மாலை 6 மணிக்கு மகாதீபம் ஏற்றிய பிறகே விளக்கை ஆன் செய்வார்கள். மேலும் தங்கள் வீட்டின் முன்பு அகல் விளக்குகள் ஏற்றி வழிபடுவார்கள். அந்தநேரம் திருவண்ணாமலை நகரமே ஒளிவெள்ளத்தில் காட்சியளிக்கும்.
வழக்கமாக தீபத்தன்று அல்லது தீபத்திற்கு மறுநாள் பவுர்ணமி தொடங்கும். ஆனால் இந்த ஆண்டு தீபத்திற்கு முந்தைய நாளான இன்று (திங்கட்கிழமை) இரவு 11.42 மணிக்கு பவுர்ணமி தொடங்கி நாளை (செவ்வாய்க்கிழமை) இரவு 8.23 மணிக்கு நிறைவடைகிறது. அதனால் இன்று மாலையில் இருந்தே திருவண்ணாமலையில் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பக்தர்களின் வசதிக்காக திருவண்ணாமலைக்கு சிறப்பு பஸ்கள் மற்றும் ரெயில்கள் இயக்கப்படுகின்றன. அதனால் இன்று முதல் திருவண்ணாமலை நகரம் முழுவதும் பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருக்கும்.
வெளியூர்களில் இருந்து திருவண்ணாமலைக்கு வரும் புறவழிச்சாலைகள் உள்பட 25 இடங்களில் தற்காலிக பஸ் நிலையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 155 இடங்களில் கார் நிறுத்தும் இடங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. பல்வேறு பகுதிகளில் இருந்து 4 ஆயிரத்து 877 சிறப்பு பஸ்கள் 10 ஆயிரத்து 644 நடைகள் இயக்கப்பட உள்ளன. ஒரு பஸ் நிலையத்தில் இருந்து மற்றொரு பஸ் நிலையத்திற்கு செல்ல ஆட்டோ வசதி, இலவச பஸ் வசதி, மினி பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கோவில், கிரிவலப்பாதை மற்றும் தற்காலிக பஸ்நிலையங்களில் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு உள்ளன. அதேபோல் குடிநீர், கழிவறை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. அனுமதி அளிக்கப்பட்ட 288 இடங்களில் மட்டுமே அன்னதானம் வழங்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. பாதுகாப்பு பணிக்காக வடக்கு மண்டல ஐ.ஜி. பிரவீன்குமார் அபினபு தலைமையில் 15 ஆயிரத்து 500 போலீசார் திருவண்ணாமலையில் குவிந்துள்ளனர். நகரை சுற்றி 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கோவில் மற்றும் கிரிவலப்பாதையில் 1,108 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. 60-க்கும் மேற்பட்ட இடங்களில் காவல் உதவி மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. 31 கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
மகா தீபம் நாளை மாலை 6 மணிக்கு ஏற்றப்படுவதையொட்டி வெளி நாடு, பிற மாநிலங்கள், பிற மாவட்டங்களில் இருந்து திருவண்ணாமலைக்கு பக்தர்கள் வந்து குவியத்தொடங்கி விட்டார்கள். அவர்கள் விடுதிகளில் தங்கி உள்ளனர். அதனால் விடுதிகள் பக்தர்களால் நிரம்பி வழிகின்றன. திருவண்ணாமலை நகரம் மற்றும் மாடவீதிகள் என எங்கு பார்த்தாலும் பக்தர்கள் கூட்டமாக காட்சி அளிக்கிறது. பெரும்பாலான பக்தர்கள் கிரிவலம் சென்றபடி உள்ளனர். இதனால் திருவண்ணாமலை நகரமே விழாக்கோலம் கொண்டுள்ளது.
கடந்த 2024-ம் ஆண்டு பெஞ்சல் புயலால் திருவண்ணாமலையில் கன மழை பெய்தது. அப்போது மகா தீபம் ஏற்றப்படும் மலையில் மண்சரிவு ஏற்பட்டு 7 பேர் உயிரிழந்தனர். இதனால் மலை ஏறுவதற்கு தகுந்த பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை நிலவியதால் பக்தர்களின் பாதுகாப்பு கருதி பக்தர்கள் மலையேற அனுமதி மறுக்கப்பட்டது. தொடர்ந்து மகாதீபம் மற்றும் இதர நாட்களில் பக்தர்கள் மலை ஏற தடை செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டும் பருவமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.
மேலும் மலையானது பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாகும். பக்தர்களின் பாதுகாப்பு கருதி இந்த ஆண்டும் பக்தர்கள் மலை ஏறுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது. சட்டத்திற்கு புறம்பாக மலை ஏறுபவர்களை தடுப்பதற்காக வனத் துறையின் மூலம் 28 இடங்களில் 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதில் 4 இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைத்து பாதுகாப்பு பணியை மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டு உள்ளது. இதில் 120 வனத்துறை பணியாளர்களும், தொண்டு நிறுவனத்தை சார்ந்த 250 தன்னார்வலர்களும் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
மலை மீது ஏற அனுமதியில்லாததால் அதை மீறுபவர்கள் மீது தமிழ்நாடு வனச்சட்டம், 1882-ன் படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக அறிவிக்கப்பட்டு உள்ளது.