திருவண்ணாமலை,
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் வெளிமாநில பக்தர்களின் வருகை குறைவாக காணப்பட்டது. இதனால் கோவிலில் பெரிய அளவில் கூட்ட நெரிசல் ஏற்படாமல் பக்தர்கள் விரைவாக சாமி தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலையில் உள்ள பிரசித்தி பெற்ற அண்ணாமலையார் கோவிலுக்கு தினமும் தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். குறிப்பாக பண்டிகை மற்றும் விசேஷ நாட்களில் பக்தர்கள் வருகை அதிகமாக இருக்கும்.
இந்த நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று கோவிலுக்கு வந்த பக்தர்களின் எண்ணிக்கை ஓரளவு குறைவாக காணப்பட்டது. குறிப்பாக வெளிமாநில பக்தர்களின் வருகை குறைந்ததால் கோவிலில் வழக்கமான கூட்ட நெரிசல் ஏற்படவில்லை.
இதனால் பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருக்காமல் விரைவாக சாமி தரிசனம் செய்தனர். அதிகபட்சமாக ஒரு மணி நேரம் வரை காத்திருந்து அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலை அம்மனை தரிசனம் செய்தனர்.
மேலும், பக்தர்களின் வசதிக்காக கோவிலின் ராஜகோபுரம், அம்மணி அம்மன் கோபுரம் உள்ளிட்ட வழிகள் வழியாக தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். தரிசனம் முடித்த பக்தர்கள் திருமஞ்சன கோபுரம் வழியாக வெளியேற ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
தீபாவளி பண்டிகையையொட்டி கோவிலுக்கு வந்த பக்தர்கள் நெரிசலின்றி சாமி தரிசனம் செய்துவிட்டு மகிழ்ச்சியுடன் திரும்பினர்.