ஸ்ரீரங்கம் ரங்கநாதர் 
ஆன்மிகம்

அரங்கனுக்கே வைத்தியம் பார்க்கும் வைத்தியர்

தன்வந்திரியின் பெருமையை காட்டவும், ராமானுஜரின் பக்தி பாவத்தை காட்டவும் பகவான் ஒரு லீலையை நடத்தினார்.

பல்வேறு ஆன்மிக சிறப்புகளைக்கொண்ட ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் ராமானுஜர் அவதார சமயத்தில் ஒரு சுவையான சம்பவம் நடந்தது.

ஒருநாள் ராமானுஜர், பெரிய பெருமாளை பார்க்க சென்றார். அப்பொழுது தைல காப்பு சாத்தி இருந்தார் பெரிய பெருமாள். என்ன காரணத்தாலோ, அவர் துணியால் போர்த்திக்கொண்டு படுத்திருந்தார்.

இதைப் பார்த்த ராமானுஜருக்கு, ‘பெரிய பெருமாளுக்கு உடம்புக்கு ஏதோ சௌகரியம் இல்லையோ’ என்று மனதில் தோன்றியது. உடனே, பெரிய பெருமாளை பார்த்து “ஏன், திருமேனி பாங்கு இல்லையோ?” என்று கேட்டேவிட்டார் ராமானுஜர்.

ராமானுஜரை பார்த்தார் பெரிய பெருமாள். பக்தனின் மனோபாவத்துக்கு ஏற்று பெருமாள் பழகுவார் அல்லவா. அதன்படி ராமானுஜரிடம் அர்ச்ச அவதாரமாகவே பேசினார்.

பெருமாளின் லீலை

“ஆமாம். கொஞ்சம் சரியாக இல்லை.” என்று சொன்னார் பெரிய பெருமாள்.

“ஏன் இப்படி ஆனது?” என்று ஸ்ரீ ராமானுஜர் கேட்க,

“எனக்கு தயிர் சாதத்துடன், நெல்லிக்காயை வைத்து நிவேதனம் செய்துவிட்டனர். நாமும் பக்தன் கொடுப்பதால் சாப்பிட்டு விட்டோம். இதனால் கொஞ்சம் உடலுக்கு ஒத்துக்காமல் ஆகி விட்டது. ஜுரம் வந்து விட்டது” என்றாராம் பெரிய பெருமாள்.

இவ்வாறு தன் பக்தனிடம், பக்தனின் மனோ நிலைக்கு ஏற்றாற்போல லீலை செய்தார் பகவான். அதுவரை ஸ்ரீ ரங்கராஜ்யம் நடத்தும் பெரிய பெருமாளுக்கு, தன் ரங்க ராஜ்யத்தில் அரச மருத்துவன் இல்லையாம்.

இதற்காக ஸ்ரீ ராமானுஜரின் மனதில் இப்படி ஒரு எண்ணம் தோன்ற சங்கல்பம் செய்தார், பெரிய பெருமாள்.

கலங்கிய ராமானுஜர்

பெரிய பெருமாளோ அர்ச்ச அவதாரத்தில் இருக்கிறார். ‘பெருமாளுக்கு ஜுரம்’ என்று கேட்டவுடன், ராமானுஜர் கண்ணீர் விட்டார்.

பெரிய பெருமாளை பார்த்து, “ஒரு மாமிச சரீரமாக இருந்தால், ஒரு வைத்தியரை கூட்டிக்கொண்டு வந்து காட்டலாம். உங்களுடைய அப்ராக்ருத திவ்ய சரீரத்துக்கு எந்த வைத்தியரை (டாக்டரை) அழைத்து வந்து காட்டுவேன்?” என்று கலங்கினார்.

“நமக்கு தான் வைத்தியர் இருக்கிறாரே” என்றாராம் பெரிய பெருமாள்.

“அதை தேவரீர் தான் சொல்ல வேண்டும்” என்று ராமானுஜர் பிரார்த்திக்க, “நம் சன்னதியில், ‘தன்வந்திரி’யை பிரதிஷ்டை செய்யும். அவர் என்னை அடிக்கடி பார்த்துக்கொள்வார்” என்று பெரிய பெருமாள் சொன்னார்.

தன்வந்திரி பகவான் சன்னதி

உடனே அதற்கான முயற்சி எடுத்த ராமானுஜர், சந்திர புஷ்கரணி அருகில் தன்வந்திரி பகவானை ஸ்தாபித்தார். பெரிய பெருமாளுக்கு எந்த பதார்த்தங்கள் தயார் செய்தாலும், அந்த பதார்த்தங்கள் பெரிய பெருமாளுக்கு உகந்ததுதானா? என்று தன்வந்திரி எதிரில் வைத்து, அவர் அனுமதித்த பின் தான், பெரிய பெருமாளுக்கு நிவேதனம் செய்வாராம்.

பெரிய பெருமாளும், தன்வந்திரி அனுமதித்த பதார்த்தங்களை மட்டும் தான், அன்று முதல் தொடுவாராம்.

அப்படி ஒரு முக்கியத்துவத்தை பெரிய பெருமாள், தன்வந்திரிக்கு கொடுத்துவிட்டார்.

தன்வந்திரியின் பெருமையை காட்டவும், ராமானுஜரின் பக்தி பாவத்தை காட்டவும் பெரிய பெருமாள் செய்த ரசிக்கதக்க லீலை இது.

இப்படி பெரிய பெருமாள் தனக்கு மருத்துவன் என்று வைத்திருக்கும் தன்வந்திரியும் அவரே தான். ஆம், பகவானின் அம்சம்தான் தன்வந்திரி. இந்த தலத்தில் உள்ள தன்வந்திரி பகவானை புதன் கிழமைகளில் தரிசித்தால், நோய்களை குணமாக்கி ஆரோக்கியத்தை வழங்குவார் என்பது ஐதீகம்.