திருமலை,
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தீபாவளி ஆஸ்தானம் விமரிசையாக நடைபெற்றது.
தீபாவளி ஆஸ்தானத்தின் ஒரு பகுதியாக உற்சவ மூர்த்திகளான மலையப்ப சுவாமி, ஸ்ரீதேவி, பூதேவி தாயார்கள் சர்வ பூபால வாகனத்தில் எழுந்தருளி கோவிலில் உள்ள தங்க வாசலில் கருடாழ்வாரை நோக்கியபடி எழுந்தருளினார்கள். அவருடன் சேனாதிபதியான விஸ்வக்சேனர், மலையப்ப சுவாமிக்கு இடதுபுறம் மற்றொரு பீடத்தில் தெற்கு திசையை நோக்கியபடி எழுந்தருளினார். பின்னர் சிறப்பு பூஜைகள், கற்பூர ஆரத்தி மற்றும் பிரசாதம் சமர்ப்பிக்கப்பட்டது.
அதன்பிறகு, மூலவர் மற்றும் உற்சவ மூர்த்திகளுக்குப் புதிய பட்டு வஸ்திரங்கள் சமர்ப்பிக்கப்பட்டு, ஆகம விதிகளின்படி வேத மந்திரங்கள் முழங்க தீபாவளி ஆஸ்தானம் நடத்தப்பட்டது.
தீபாவளி ஆஸ்தானத்தை முன்னிட்டு கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை மற்றும் ஆர்ஜித பிரம்மோற்சவம் ஆகிய சேவைகள் ரத்து செய்யப்பட்டன.
தீபாவளி ஆஸ்தானத்தில் பங்கேற்ற தேவஸ்தான தலைவர் முத்தடா ரவிச்சந்திரா, பக்தர்களுக்கு தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்தார். அனைவரும் குடும்பத்தினருடன் ஆரோக்கியம், நீண்ட ஆயுள், செல்வ வளத்துடன் மகிழ்ச்சியாக வாழ பெருமாளின் அருள் கிடைக்கட்டும் என வாழ்த்தினார்.
இந்நிகழ்ச்சியில் திருமலை பெரிய ஜீயர் சுவாமிகள், சின்ன ஜீயர் சுவாமிகள், தேவஸ்தான கூடுதல் செயல் அலுவலர் வெங்கையா சவுத்ரி, கோவில் அர்ச்சகர்கள் மற்றும் தேவஸ்தான அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இதேபோல் திருப்பதியில் உள்ள ஸ்ரீ கோவிந்தராஜ சுவாமி மற்றும் ஸ்ரீ கோதண்டராமசுவாமி கோவில்களில் பாரம்பரிய முறைப்படி நேற்று தீபாவளி ஆஸ்தானம் நடைபெற்றது. இரு கோவில்களிலும் சுவாமிக்கு புதிய ஆடைகளும் தீபங்களும் சமர்ப்பிக்கப்பட்டு, பாரம்பரிய முறைப்படி சிறப்பு வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்நிகழ்வையொட்டி ஸ்ரீ கோதண்டராம சுவாமி கோவிலில் நடைபெறவிருந்த 'சஹஸ்ர கலசாபிஷேகம்' மற்றும் 'ஹனுமந்த வாகன சேவை' ரத்து செய்யப்பட்டன. இந்த நிகழ்வில் திருமலை பெரிய ஜீயர் சுவாமிகள், சின்ன ஜீயர் சுவாமிகள், துணை நிர்வாக அதிகாரிகள் சாந்தி மற்றும் நாகரத்னா, உதவி நிர்வாக அதிகாரி ஏ.பி. நாராயண சௌத்ரி, கண்காணிப்பாளர் சீனிவாசலு ரெட்டி, கோயில் அர்ச்சகர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.